லாட்ஜ் அறையில் தனிமையில் இருந்தபோது வாக்குவாதம் காதலியின் கழுத்தை அறுத்து காதலன் தற்கொலை முயற்சி

திருப்பூர், டிச. 29: திருப்பூரில், லாட்ஜ் அறையில் தனிமையில் இருந்தபோது ஏற்பட்ட பிரச்சனையால் காதலியின் கழுத்தை அறுத்து காதலன் தற்கொலைக்குமுயன்ற விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையை அடுத்த காட்டு நெம்புலி பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் எழில்மதி (21). இவர் திருப்பூர் காலேஜ் ரோடு ரங்கநாதபுரம் பகுதியில் தங்கி தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதே காட்டு நெம்புலி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (27). இவர் சென்னையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். கடந்த 1 வருடமாக எழில்மதியை காதலித்து வந்துள்ளார். நேற்று தனது காதலியை சந்திப்பதற்காக வெங்கடேஷ் சென்னையிலிருந்து திருப்பூர் வந்து வளர்மதி பகுதியில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்துள்ளார்.

நேற்று மாலை எழில்மதி அங்கு சென்றார். இருவரும் அங்கு தனிமையில் இருந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது வெங்கடேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால் எழில்மதியின் கழுத்தை அறுத்தார். பின்னர் தன்னுடைய கழுத்தையும் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இருவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கி அறைக்குள் கிடந்தனர். இதனை பார்த்த லாட்ஜ் நிர்வாகத்தினர் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறியதாவது: தகவல் வந்ததும் சம்பவ இடத்திற்கு சென்று விட்டோம். இருவரும் கழுத்து அறுபட்ட நிலையில் மயக்கத்தின் இருந்தனர். இருவரும் பேச முடியாத சூழலில் இருப்பதால் முழுமையான விசாரணையை நடத்த முடியவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்த உள்ளோம். இவ்வாறு கூறினர்.

Related Stories:

>