×

பொக்காபுரம் பகுதியில் காயத்துடன் சுற்றித்திரிந்த யானைக்கு மருத்துவ சிகிச்சை

ஊட்டி,டிச.29: பொக்காபுரம் பகுதியில் காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி கோட்டத்திற்குட்பட்ட பொக்காபுரம் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை முதுகில் காயத்துடன் உலா வந்தது. இதனை கண்ட வனத்துறையினர், அதற்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலையில், பழங்களில் மருந்து, மாத்திரைகளை வைத்து அளித்து வந்தனர். கடந்த இரு வாரங்களாக யானைைய தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதன் காரணமாக யானை உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. பொக்காபுரம் தொட்டிலிங்கி அருகே யானை முகாமிட்டிருந்த நிலையில், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் நிலவியது. இதனை தொடர்ந்து உயர் அதிகாரிகளின் ஒப்புதலின் பேரில் யானையை மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்க முடிவானது. முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கவுசல் அறிவுறுத்தலின் பேரில்  தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் இருந்து சுஜய், வாசிம் ஆகிய இரு கும்கி யானைகள் பொக்காபுரம் பகுதிக்கு வரவழைக்கப்பட்டன. கோவை வன கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமாரன் தலைமையில், ஓய்வுபெற்ற கால்நடைத்துறை இணை இயக்குநர் மனோகரன், முதுமலை வன கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் ஆகியோர் நேற்று யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர், கும்கி யானைகளின் காலுடன், காயம்பட்ட காட்டு யானையை கட்டி வைத்து, அதற்கு மருத்துவர்கள் சிகிச்ை–்ச அளித்தனர். பின், அந்த யானை காட்டிற்குள் விடுவிக்கப்பட்டது. தேவைப்பட்டால் மீண்டும் அந்த யானைக்கு இதேபோன்று சிகிச்சை அளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : area ,Bokapuram ,
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி