கோவை செல்வாம்பதி குளக்கரையில் 98 ஆக்கிரமிப்பு வீடுகளின் மின் இணைப்பு துண்டிப்பு

கோவை, டிச.29: கோவை செல்வாம்பதி குளக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 98 வீடுகளின் மின் இணைப்பை அதிகாரிகள் துண்டித்தனர்.கோவை ஆர்.எஸ்.புரத்தில் செல்வாம்பதி குளம், குமாரசாமி குளம் உள்ளது. இந்த குளங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு அழகிய பூங்கா, நடைபாதை, பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன. இதனைத்தொடர்ந்து குளக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள வீடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு மலுமிச்சம்பட்டி, கோவைப்புதூர் உள்ளிட்ட இடங்களில் குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன. இங்குள்ளவர்கள், அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு இடம்பெயர்ந்து சென்றதும் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்படுகிறது.

இந்த நிலையில் செல்வாம்பதி குளக்கரையில் ஆக்கிரமித்து வீடு கட்டியிருந்தவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் கோவைப்புதூரில் மாற்று வீடுகள் வழங்கப்பட்டன. அந்த வீடுகளை பெற்றுக்கொண்ட அவர்கள், இந்த ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்யாமல் இருந்து வந்தனர். இதனையடுத்து கோவை மாநகராட்சி அதிகாரிகள், குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள் ஆகியோர் இணைந்து அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 98 வீடுகளுக்கு மின் இணைப்பை நேற்று துண்டித்தனர்.மாநகராட்சி அதிகாரி கூறுகையில், ‘செல்வாம்பதி குளக்கரையில் ஆக்கிரமித்து வீடு கட்டிய 360 குடும்பங்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் கோவைப்புதூரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் 262 குடும்பங்கள் புதிய அடுக்குமாடி வீட்டிற்கு சென்று விட்டனர். மீதமுள்ள 98 குடும்பங்கள் புதிய வீடுகளை பெற்றுக்கொண்ட போதிலும், ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்யாமல் அங்கேயே வசித்து வருகின்றனர்.

எனவே முதற்கட்ட நடவடிக்கையாக அவர்களது வீடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த மின் இணைப்பு நேற்று துண்டிக்கப்பட்டு உள்ளது. வீடுகளில் உள்ள பொருட்களை எடுத்து செல்ல கால அவகாசம் வழங்கி உள்ளோம். அவர்கள் பொருட்களை எடுத்து சென்றதும் அந்த வீடுகள் இடிக்கப்படும்’ என கூறினார்.

Related Stories:

>