×

சத்தியமங்கலம் அருகே செல்போன் சிக்னல் இல்லாமல் தவிக்கும் மலைகிராம மக்கள்

சத்தியமங்கலம், டிச. 29: தமிழகம் - கர்நாடக மாநில எல்லைப்பகுதியில் கொள்ளேகால் செல்லும் வழியில் அமைந்துள்ளது கேர்மாளம் மலைப்பகுதியில் செல்போன் சிக்னல் இல்லாமல் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.
 ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டாரத்திற்குட்பட்ட கேர்மாளம் ஊராட்சி, பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். இந்த ஊராட்சியில் மொத்தம் 7 வார்டுகள் உள்ளன.
கேர்மாளம் அருகே பூதாளபுரம், தலூதி, வி.எம். தொட்டி, குடியூர், குட்டை தொட்டி, ஜே.ஆர்.எஸ். புரம், ஜோகிகவுண்டணூர், சிக்குனிசாபாளையம், ஒரத்தி, கானக்கரை ஆகிய கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதை வழியாக  கொள்ளேகால் செல்லும் வழியில் அடர்ந்த வனப்பகுதியில் கேர்மாளம் கிராமம் உள்ளது. இதனால் எப்போதும் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் இப்பகுதி தட்ப வெப்ப நிலை அமைந்திருக்கும். கேர்மாளம் பகுதி மக்களுக்கு பிரதான தொழிலே விவசாயம் மட்டும்தான். இப்பகுதியில் சோளம், ராகி, சின்ன வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், பீன்ஸ், மஞ்சள், போன்ற பயிர்கள் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகின்றன.

இப்பகுதி மக்களுக்கு தமிழக-கர்நாடக மாநிலம் எல்லைப்பகுதியில் கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள உடையார்பாளையம் பகுதிதான் பஜார். அங்கு சென்றுதான் அத்தியவாசிய பொருட்களை வாங்கி வருகின்றனர். இல்லை என்றால், சுமார் 50 கிலோ மீட்டர் பயணம் செய்து சத்தியமங்கலம் வரவேண்டும். இதனிடையே இப்பகுதியில் செல்போன் டவர் வசதி முற்றிலும் இல்லாததால், இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இது குறித்து கேர்மாளம் செக்போஸ்ட் அருகே டீ ஸ்டால் வைத்துள்ள ஜடேரூத்ரசாமி கூறுகையில், ‘‘இங்கு செக்போஸ்ட் பகுதியில் மட்டுமே டவர் கிடைக்கும். அதுவும் ரோமிங், கர்நாடக மாநில டவர்தான். செக்போஸ்ட் அருகில் உள்ள வீடுகளுக்குகூட டவர் கிடைக்காது. விவசாயிகள் தங்களது பொருட்களை மேட்டுப்பாளையம் மார்க்கெட்டிற்கு கொண்டு செல்வார்கள். அதற்காக வாகனங்களை அழைக்க வேண்டும், விவரம் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், செக்போஸ்ட் வரை வர வேண்டும். கேர்மாளம் பகுதிக்கு சத்தியமங்கலம், கோவையில் இருந்து பஸ் வசதி உள்ளது. சொந்தங்கள் ஊருக்கு வருவதுகூட தெரிவிக்க டவர் வசதியில்லை. மிகவும் குறிப்பாக ஊரடங்கு காலங்களில் ஆன்லைன் வகுப்புகள் முற்றிலும் தடைபட்டு பள்ளி மாணவ, மாணவிகள் கல்வி பாதிக்கப்பட்டது. ஒருவருக்கு உடல் நிலை சரியில்லை என்றால்கூட ஆம்புலன்ஸ்க்கு தெரிவிக்க முடியாத நிலையில் இப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்” என்றார்.

அப்பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் கூறியதாவது: ‘டிராக்டர் மூலம் விவசாய நிலங்களை உழவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். அருகில் உள்ள கிராமங்களுக்கு இப்பணிக்கு செல்ல தகவல் தெரிவிக்க வேண்டும் என்றால், அது முடியாது. நேரில் சென்றால்தான் அன்றைய வேலை உள்ளதா? என தெரியவரும். எங்கள் பகுதி மாணவ, மாணவிகள் பலர் ஈரோடு, கோவை என அங்குள்ள கல்லூரிகளில் படித்து வருகின்றனர். அவர் எங்களுக்கு ஒரு அவசர தேவைக்கு போன் செய்ய வேண்டும் என்றால்கூட அது முடியாது. வனப்பகுதி என்பதால் மாலை 6 மணிக்கு மேல் வெளியே செல்வது சிரமம். யானை, புலி என வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம்” என்றார்.இப்பகுதியில் தனியார் அல்லது அரசு சார்பில் டவர் அமைத்து இப்பகுதி மக்களின் வாழ்வில் முன்னேற்றத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Tags : Mountain villagers ,Satyamangalam ,
× RELATED ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே...