* ஒன்றிய அரசை 10 கேள்விகள் கேட்டு விளாசிய அமைச்சர் தங்கம் தென்னரசு
கல்வி என்பது நாம் விளையாடக் கூடிய அரசியல் களமல்ல என்றும், தமிழ்நாடு கொடுத்தது ரூ.7.5 லட்சம் கோடி, வந்தது ரூ.2.85 லட்சம் கோடி என்று ஒன்றிய அரசை 10 கேள்விகள் கேட்டு அமைச்சர் தங்கம் தென்னரசு விளாசி எடுத்து பேசினார். தமிழக சட்டசபையில், 2025-26 ஆண்டிற்கான கூடுதல் செலவிற்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்து பேசியதாவது:
ஏறத்தாழ 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சி 11.19 சதவிகிதம் என்கிற இரட்டை இலக்கத்தை நாம் எய்தியிருக்கிறோம். நாம் எதிர்பார்த்ததைக் காட்டிலும், நாம் திட்டமிட்டதைக் காட்டிலும், 2.2 சதவிகிதம் அதிகமான பொருளாதார வளர்ச்சியைப் பெற்றிருக்கக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக தமிழ்நாட்டிலே கல்வி கட்டமைப்பு எந்த வகையிலே சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், ஒன்றிய அரசு ஏனோ நமக்கே உரித்தாக இருக்கக்கூடிய ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்திற்காக வழங்கக்கூடிய நிதியினை தொடர்ச்சியாக வழங்குவதற்கு மறுத்து வருகிறது. ஏறத்தாழ ரூ.4 ஆயிரம் கோடிக்கு மேலாக தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய நிதியை தர மறுத்து, கல்வி உரிமைச் சட்டம், ஆர்டிஇ என்று சொல்லக்கூடிய கல்வி உரிமைச் சட்டத்தின் பால், நமக்கு வழங்கக்கூடிய ரூ.450 கோடி நிதியை மட்டுமே தற்போது விடுவித்திருக்கிறார்கள்.
விடுவிக்க வேண்டிய பணம் எவ்வளவு? ரூ.4 ஆயிரம் கோடி. ஆனால், கொடுத்திருக்கக்கூடிய பணம் வெறும் ரூ.450 கோடி. நீங்கள் என்னதான் இந்த நிதியை முடக்கி வைத்திருந்தாலும்கூட, எந்தக் குழந்தையினுடைய படிப்பையும், நிதியாதாரங்கள் இல்லையென்ற காரணத்தால் நாங்கள் நிறுத்தி விட மாட்டோம் என்கின்ற உயரிய நோக்கோடு, நிதியை விடுவித்து தருகிறோம். அதற்குக் காரணம், கல்வி என்பது நாம் விளையாடக்கூடிய அரசியல் களம் அல்ல, அது அரசியல் இயக்கங்கள் ஒவ்வொன்றிற்கும் இருக்கக்கூடிய தார்மீகமான ஒரு பொறுப்பு என்ற காரணத்தால் தான்.
ஜல்ஜீவன் திட்டத்திலே ஒன்றிய அரசினுடைய பங்காக நீங்கள் அளிக்க வேண்டிய தொகை ரூ.3407 கோடி. அந்த நிதி நமக்கு வழங்கப்படாமல் ஒன்றிய அரசு நம்மை வஞ்சித்து வருகிறது. உடனடியாக இந்த நிதிகளை விடுவிக்க வேண்டும். தமிழ்நாட்டில் இன்றைக்கு சாலை கட்டமைப்புகள் மிகப் பெரிய அளவிலே வந்திருக்கக்கூடிய காரணத்தால், நம்முடைய தொழில் வளர்ச்சி மிகப்பெரிய அளவிலே உருவாகியிருக்கிறது. 2024-25ம் நிதியாண்டில் ஒன்றிய அரசினால் 8 புதிய தேசிய அதிவேக நெடுஞ்சாலை வழித்தடங்கள் மொத்தம் ரூ.50,655 கோடி மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்டன.
அதில், உத்தரப்பிரதேச மாநிலம் மட்டும் 3 வழித்தடங்களைப் பெற்றிருக்கிறது. 8 வழித்தடங்களில் 3 வழித்தடங்கள் உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு என்று, அதற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.11,846 கோடி. குஜராத் மாநிலத்திற்கு ஒரு வழித்தடம் கொடுத்திருக்கிறார்கள். அதற்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.10,534 கோடி. மகாராஷ்டிராவிற்கு ஒரு வழித்தடம் கொடுத்திருக்கிறார்கள்.
அதற்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.17,827 கோடி என மொத்தமாக நீங்கள் கூட்டிப்பார்த்தால், நான் குறிப்பிட்டதைப் போல அந்த மாநிலங்களுக்கெல்லாம் ரூ.30,207 கோடி. இங்கு நான் குறிப்பிட்டிருக்கின்ற மொத்தம் ரூ.50,655 கோடி ஒதுக்கீட்டில், இந்த 3 மாநிலங்களுக்கு மட்டும் ரூ.38,207 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த 8 புதிய அதிவேக சாலைகளில் ஒரு சாலைகூட தமிழ்நாட்டிற்கு வழங்கப்படவில்லை. இதை கேட்டால் வளர்ச்சியடைந்த மாநிலம் என்ற ஒரே காரணத்துக்காக தமிழ்நாட்டை வஞ்சிக்கப்படுகிறது என்பதை நீங்களே ஒத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
வளரக்கூடிய பிள்ளைகளுக்கு நீங்கள் வளர்ந்துவிட்டீர்கள் என்பதற்காக ஊட்டச்சத்தை நிறுத்துவேன் என்பது எந்தவகையில் நியாயம். தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மொத்த செலவினமாக தமிழ்நாட்டுக்கு அவர்கள் செய்திருப்பது ரூ.27,986 கோடி. ஆனால், உத்திரப்பிரதேச மாநிலத்திற்கு கொடுத்தது ரூ.81,803 கோடி. தமிழ்நாட்டை விட 3 மடங்கு அதிகம். ரயில்வே திட்டங்களை எடுத்துக்கொள்ளுங்கள். கோவை-கரூர், கோவை-கோபிசெட்டிப்பாளையம், பவானி-சேலம், மதுரை-வேலூர், இனாம்குளத்தூர் போன்று இருக்கக்கூடிய முக்கியமான பாதைகளுக்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
ஆனால், அந்தக் கோரிக்கைகள் ஒன்றிற்குக் கூட ஒன்றிய அரசு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. மூன்றாண்டுகளில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டிருக்கக்கூடிய மொத்த ரயில்வே நிதி ரூ.19,068 கோடி. ஆனால், உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு இந்தாண்டு 2025-26ம் நிதியாண்டில் மட்டும் ரூ.19,858 கோடி. அதாவது, 3 ஆண்டுகளில் நமக்கு வழங்கியது ரூ.19,068 கோடி. ஆனால், இந்த 2025-26 ஒரே நிதியாண்டில் மட்டும் உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு ரூ.19,858 கோடி வழங்கப்பட்டிருக்கிறது.
ஆக, மூன்றாண்டுகளில் நமக்கு வழங்கப்பட்ட தொகையானது, ஒரே ஆண்டில் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. முதல்வர், உட்கட்டமைப்புத் திட்டங்களில் உருவாக்கியிருக்கக்கூடிய மகத்தானதொரு புரட்சி, ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டம். ஒரு வீடு கட்டுவதற்கு 3½ லட்சம் ரூபாய் என்ற அளவில் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிதியையும் கூட நாம் ஒன்றிய அரசிடமிருந்து பெறவில்லை. முழுமையாக தமிழ்நாடு அரசின் நிதியிலிருந்து முதல்வர் தந்திருக்கிறார். இதுவரை, இந்தத் திட்டத்தில் ரூ.7,000 கோடியில் 2,00,000 வீடுகளைக் கட்டுவதற்கு முதல்வர் ஒப்புதல் அளித்திருக்கிறார்கள்.
அதில் ஒரு சாதனை நோக்கோடு 1 லட்சம் வீடுகள் இதுவரை கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 74,000 வீடுகள் தற்போது கட்டுமானத்தின் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கின்றன. அதேபோன்று, நகர்ப்புறத்தில் ஒரு வீட்டைக் கட்டுவதற்கு ஏறத்தாழ ரூ.15 லட்சம் செலவாகக்கூடிய நிலை இருக்கிறது. ஆனால், பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் என்ற நகர்ப்புறப் பகுதிகளுக்கான திட்டத்திற்கு ஒன்றிய அரசின் பங்களிப்பு என்பது வெறும் ரூ.1.5 லட்சம் தான்.
குறிப்பிட்ட வகையில் ரூ.15 லட்சம் செலவாகின்ற நிலையில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் தான், அதாவது 10 சதவிகித பங்கினைதான் ஒன்றிய அரசாங்கம் தருகிறது. இது மிக மிகக் குறைவான நிதி. ஆனால், மீதமிருக்கக்கூடிய நிதியை, சுமார் 90 சதவிகித கட்டுமானத்திற்கான நிதியை தமிழ்நாடு அரசு தனது சொந்த நிதியிலிருந்து வழங்கிக் கொண்டிருக்கிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய சமூக உதவித் திட்டத்தின்கீழ் ஒன்றிய அரசு வழங்கக்கூடிய நிதி எவ்வளவு தெரியுமா? வெறும் ரூ.200. அதைப்போல முதியோர் ஓய்வூதியத்திற்காக அவர்கள் வழங்கக்கூடிய தொகை ரூ.200.
விதவைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காக வழங்கக்கூடிய தொகை ரூ.300. இந்தத் தொகையை வைத்துக்கொண்டு எப்படி ஒருவர் தங்களுடைய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். எனவே தான் முதல்வர், இந்தத் தொகையை உயர்த்தி மாதம் ரூ.1,200 தந்திருக்கிறார்கள். அதைப்போல ‘நிதிப் பகிர்விலே தொடர்ந்து தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு வந்திருக்கிறது’. அதனுடைய நிதிப் பகிர்வு விகிதம், 7 சதவிகிதம் 15-வது நிதிக் குழுவினால் ஏற்கெனவே 9-வது நிதிக் குழுவில் 7 சதவிகிதமாக இருந்தது.
ஆனால், 15-வது நிதிக் குழுவில் 4.079 சதவிகிதமாக அது குறைத்து நிர்ணயிக்கப்பட்ருக்கிறது. இதனால் நமது மாநிலத்திற்கு வரக்கூடிய அந்த நிதிப் பகிர்வு நிராகரிக்கப்பட்டிருக்கக்கூடிய அளவிற்கு ஏறத்தாழ ரூ.2.63 லட்சம் கோடி நமக்கு வர வேண்டிய அந்தத் தொகை, நமக்கு வராமல் ஒரு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கிறது. நம்முடைய ஒட்டுமொத்தமாக நிலுவையில் இருக்கக்கூடிய கடன் தொகையில் இது 32 சதவிகிதமாக இருக்கும். ஒட்டுமொத்த நாட்டினுடைய மக்கள் தொகையில் தமிழ்நாடு 6.124 சதவிகிதத்தைக் கொண்டிருக்கிறோம்.
ஆக, 6 சதவிகிதம் மக்கள் தொகையைக் கொண்டிருக்கக்கூடிய ஒரு மாநிலம் வெறும் 4.0 சதவிகிதத்தை நாம் இன்றைக்கு நிதிப் பகிர்வாகப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். 2014 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான அந்தக் காலகட்டத்தில் தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிற்குக் கொடுத்திருக்கக்கூடிய வரிப் பங்களிப்பு எவ்வளவு தெரியுமா? ரூ.7.5 லட்சம் கோடி. 2014ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில்.
ஆனால், இந்த ரூ.7.5 லட்சம் கோடி கொடுத்துவிட்டு, நமக்கு எவ்வளவு வரிப் பகிர்வாக வந்திருக்கிறது என்று சொன்னால், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காக ரூ.2.85 லட்சம் கோடி மட்டுமே நமக்கு நிதிப் பகிர்வாக வந்திருக்கிறது. ஆனால் உத்தரப் பிரதேசம் கொடுத்தது வெறும் ரூ.3.07 லட்சம் கோடி. ஆனால் சட்டமன்றத்திற்கு வெளியே இன்றைக்குப் பெருமழையாகப் பெய்வதைப்போல, உத்தரப் பிரதேசத்தில் நிதி பெருமழையாக வந்து, 3 மடங்கு தொகையாக, ஏறத்தாழ ரூ.10.60 லட்சம் கோடி பெற்றிருக்கிறார்கள். ஒன்றிய அரசை நோக்கி, இறுதியாக ஒரு 10 கேள்விகளை வைக்க விரும்புகிறேன்.
தமிழ்நாட்டின்மீது புதிய கல்விக் கொள்கை வாயிலாக இந்தித் திணிப்பை மீண்டும் கையில் எடுப்பது மாற்றாந்தாய் மனப்பான்மை இல்லையா?. உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார் போன்ற மாநிலங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெடுஞ்சாலை வழித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், தொடர்ந்து தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது,
புதிய ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் தென்னக ரயில்வேக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம்? கோவை மற்றும் மதுரை மாநகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தக் கோரிய தமிழ்நாட்டு அரசினுடைய முன்மொழிவுகள் டெல்லியில் கடந்த 20 மாதங்களாக நீண்ட உறக்கத்திலே உறைந்துபோய் இருக்கிறதே, நியாயம்தானா? கோவை மாநகரத்தை நீங்கள் புறக்கணித்திருக்கிறீர்கள். மதுரைக்குக்கூட நீங்கள் மெட்ரோ ரயிலைத் தருவதற்கு மறுக்கிறீர்களே.
எங்களுக்காக இல்லையென்றாலும், உங்களோடு வந்திருக்கக்கூடிய, உங்களுடன் இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருக்கக்கூடிய மதுரை மாநகரத்திற்காகவாவது, உங்களுடைய கடைக்கண் பார்வை திரும்பி இருக்கிறது என்று சொன்னால், அது அங்கயற்கண்ணியினுடைய பார்வையே அதற்கு போதும், ஆளக்கூடியவர்களுடைய பார்வை தேவையில்லை என்ற முடிவிலே நீங்கள் இருக்கிறீர்களா என்பதை நான் கேட்க விரும்புகிறேன்.
அதேபோல, நகர்ப்புற ஏழைகளுக்கு கட்டப்படும் வீடுகளுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் நிதி 90 சதவிகிதம், ஒன்றிய அரசினுடைய பங்கு 10 சதவிகிதம் மட்டும். இத்திட்டத்துக்கு பிரதம மந்திரி பெயரை நீங்கள் வைத்துக்கொள்வதற்கு எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால், அதற்கான உரிய நிதியை தமிழ்நாட்டிற்கு தர மறுக்கிறீர்கள்? மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதி ரூ.975 கோடியை இன்னும் தர மறுக்கிறது, ஜல் ஜீவன் திட்டம் இன்று வறண்டு கிடக்கிறது. தமிழ்நாட்டிற்கு வந்து சேர வேண்டிய ரூ.3,709 கோடி நிதி இன்னும் வரவில்லை.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தொடர்ந்து 10 சதவிகிதத்தை அளித்துக் கொண்டிருக்கக்கூடிய தமிழ்நாடு, ஒன்றிய அரசிடமிருந்து வெறும் 4 சதவிகித நிதியைப் பெறுவது கூட்டாட்சித் தத்துவத்திற்கு உகந்ததா என்ற கேள்விகளை நான் இந்த பேரவையிலே வைக்கிறேன். இந்த கேள்விகளுக்கான விடையை ஒன்றிய அரசோ அல்லது அதை ஆளக்கூடிய கட்சியோ தராமல் போகலாம். ஆனால், நாட்டு மக்கள், வரக்கூடிய 2026ம் ஆண்டு சட்டமன்றப் பேரவைத் தேர்தலிலே நியாயத்தோடு வழங்குவதற்கு காத்திருக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
* வளரக்கூடிய பிள்ளைகளுக்கு நீங்கள் வளர்ந்துவிட்டீர்கள் என்பதற்காக ஊட்டச்சத்தை நிறுத்துவேன் என்பது எந்தவகையில் நியாயம்.
