கிருஷ்ணகிரியில் நகராட்சி கமிஷனர் உள்பட 3 பேருக்கு கொரோனா

கிருஷ்ணகிரி, டிச.29: கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷனர் உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷனர்  சந்திரா மற்றும் சுகாதார பொறியாளர் மோகனசுந்தரம் ஆகியோர்,  அலுவலக பணியின் காரணமாக சென்னை சென்று வந்தனர். இருவருக்கும் காய்ச்சல், சளி,  இருமல் அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, அவர்களுக்கு பரிசோதனை  மேற்கொள்ளப்பட்டதில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  இதையடுத்து இருவரும் தனிமைப்பட்டு, நகராட்சி ஊழியர்கள்,  பணியாளர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் நகராட்சி அலுவலர்  ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், பலரின்  பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரியவில்லை. இதனால் நகராட்சி அலுவலகம்  முழுவதும் கிருமி நாசினி  தெளிக்கப்பட்டு வருகிறது. அலுவலகத்திற்கு வரும்  பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் அறிகுறிகள் உள்ளதா என சோதனை செய்யப்படுகிறது. பரிசோதனை  முடிவில், வைரஸ் தொற்று மேலும் அதிகரித்தால், நகராட்சி அலுவலகம் தற்காலிகமாக  மூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.  வைரஸ் தொற்று குறைந்து வரும் நிலையில், நகராட்சி கமிஷனர், பொறியாளருக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது நகர மக்களிடையே அச்சத்தை  ஏற்படுத்தியுள்ளது.

மேலும் 9 பேருக்கு பாதிப்பு

கிருஷ்ணகிரி  மாவட்டத்தில் நேற்று 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  சிகிச்சையில் குணமடைந்து நேற்று 12 பேர் வீடு திரும்பி உள்ளனர்.  மாவட்டத்தில் இதுவரை 7,847 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7,625 பேர்  குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 106 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  கொரோனாவால் பாதிக்கப்பட்டு, இறந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக உள்ளது.

Related Stories:

>