சென்னை: சென்னையில் உள்ள துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வீட்டிற்கு இன்னும் சற்று நேரத்தில் குண்டு வெடிக்கும் என்று மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை மயிலாப்பூர் உதவி கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் நள்ளிரவு மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில் சென்னையில் உள்ள ‘குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வீட்டில் இன்னும் சற்று நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து போலீசார் பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் அளித்தனர். அதன்படி தேனாம்பேட்டை போலீசார் வெடிகுண்டு மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போயஸ் கார்டனில் உள்ள துணை ஜனாதிபதி வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் எந்த வெடிகுண்டு சிக்கவில்லை. இதையடுத்து இது வெறும் புரளி என தெரியவந்தது.
அதைதொடர்ந்து தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்த நபரை சைபர் க்ரைம் பிரிவுடன் இனைந்து தேடி வருகின்றனர். அதேபோல், மந்தைவெளியில் உள்ள நடிகர் எஸ்.வி.சேகர் வீடு, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வீடுகளுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீசார் சோதனை நடத்திய போது புரளி என தெரியவந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
