×

சிக்னல் கோளாறு காரணமாக செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே ரயில்கள் நிறுத்தம்

சென்னை: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேல் எக்ஸ்பிரஸ், பாசஞ்சர் உள்ளிட்ட ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள். ஒட்டிவாக்கம் அருகே ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக சென்னையில் இருந்து விழுப்புரம் மார்க்கமாக செல்லும் ரயில்கள் செங்கல்பட்டில் ஒரு மணி நேரத்திற்கும் மேல் நிறுத்தி வைக்கபட்டிருக்கின்றன. விழுப்புரம் பாசஞ்சர், பாண்டிச்சேரி விரைவு ரயில், செங்கோட்டை விரைவு ரயில், சேது விரைவு ரயில் உள்ளிட்டவை நீண்ட நேரம் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டிருந்தன. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து நேற்று இரவு 11.35 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத ரயில் மறுநாள் காலை 10.15 மணிக்கு மதுரை சென்றடையும். அதேபோல, தாம்பரத்தில் இருந்து நேற்று இரவு 7.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 7.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்ட இருந்தாலும் அவை போதுமானதாக இல்லை. இதனால் போதுமான ரயில்கள் இல்லாததால் எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலை மோதியுள்ளது. ரயிலில் கழிவறைக்கு பக்கத்தில், பொருட்கள் வைக்கும் இடம் என கிடைக்கும் இடங்களில் அமர்ந்து மக்கள் பயணிக்க தொடங்கியுள்ளனர். இந்த சிரமங்களுக்கு இடையே பயணிகள், பயணத்தை தொடர்ந்த நிலையில், ரயில்கள் சிக்னல் கோளாறு காரணமாக ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது, பயணிகளுக்கும் மேலும் அசவுகரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே இதுபோன்ற பண்டிகை நாட்களில் சிக்னல் கோளாறு ஏற்படாதவாறு முன்கூட்டியே பழுது பார்க்கும் பணியை மேற்கொள்ள வேண்டும், மீறி பழுது ஏற்பட்டால் உடனடியாக அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை வைத்தனர்.

Tags : Chengalpattu railway station ,Chennai ,Pasanjar ,Chengalpattu railway ,Viluppuram Markt ,Pastivakam ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!