- அமைச்சர்
- சகராபானி
- எடபாடி பழனிசாமி
- சென்னை
- சட்டசபை எதிர்க்கட்சி தலைவர்
- எடப்பாடி பழனிசாமி
- சட்டசபை
- டெல்டா மாவட்டங்கள்
சென்னை: சட்டப்பேரவை கூட்டத்தில் நேற்று, நேரம் இல்லா நேரத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: டெல்டா மாவட்டங்களில் விளைவித்த நெல் மணிகளை நேரடி கொள்முதல் செய்ய வேண்டும். 30 லட்சம் மூட்டை தேங்கி உள்ளது. தற்போது மழை அதிகளவு பெய்து வருகிறது. 15 நாட்களாக விவசாயிகள் காவல் காத்து வருகின்றனர். எனவே நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதற்கு விளக்கம் அளித்து, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி பேசியதாவது: அக்டோபர் 1ம் தேதி முதல் தான் நெல் கொள்முதல் பணியை தொடங்குவோம். ஆனால், செப்டம்பர் 1ம் தேதி முதல் நெல் கொள்முதல் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என முதலமைச்சர் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி அனுமதி பெற்றார். டெல்டா மாவட்டங்களில் விளைவிக்கும் நெல்லை கொள்முதல் செய்யவும், அதற்கு தேவையான பொருட்களை இருப்பில் வைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். தற்போது தினசரி 8 ரயில்களில் வேகன் மூலமும் நெல் கொண்டு செல்கிறோம். கூடுதல் வேகன் கேட்டு ரயில்வேக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. 25 இடங்களில் திறந்தவெளி சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டுள்ளது.தினமும் 35 ஆயிரம் முட்டைகளை வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்கிறோம். நெல் அதிகமாக விளைகின்ற இடத்தில் ஆயிரம் மூட்டைகளுக்கு பதிலாக, 2000 மூட்டைகள் வாங்கப்படுகிறது.
ஒரு சில ஊராட்சிகளில் 3 ஆயிரம் மூட்டைகளை வாங்குகின்றோம். தற்போது ஆயிரம் மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக மாலை 6 மணி என்று இருந்தது, தற்போது இரவு 8 மணியும், ஞாயிறுக்கிழமையும் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இவ்விவகாரத்தில் அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது. கூடுதலாக 3.92 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கை கட்ட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒன்றிய அரசு செறிவூட்டப்பட்ட அரிசிக்கான அனுமதியை வழங்கினால் ஒரே நாளில் இந்த பிரச்னைக்கு முடிவு ஏற்பட்டு விடும். நீங்கள் (அதிமுக) ஒன்றிய அரசின் கூட்டணியில் இருக்கிறீர்கள். அதனால் ஒன்றிய அரசிடம் சொல்லி இதற்கு அனுமதி வாங்கித்தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
