×

குமரியில் இன்று முதல் அதிகாலை 4 மணியில் இருந்து அரசு பஸ்கள் இயக்கம்

நாகர்கோவில், டிச.29 :கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் செப்டம்பர் வரை தமிழகத்தில் அரசு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக தளர்வுகள் வந்த பின், போக்குவரத்தும் தொடங்கியது. தற்போது சகஜ நிலை வந்தாலும் கூட, அரசு பஸ்களில் பயணிகள் கூட்டம் மிக குறைவாகவே உள்ளது. குறிப்பாக டவுன் பஸ்களில் வருமானம் இல்லை என போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறி வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக R85 லட்சம் வரை வருமானம் வரும். ஆனால் தற்போது இதில், 55 சதவீத வருமானம் கிடைப்பதே அரிதாக உள்ளதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். கொரோனாவுக்கு பின் அதிகாலை மற்றும் இரவு நேர ஸ்டே பஸ்களும் ரத்து செய்யப்பட்டன. காலை 6 மணியில் இருந்து தான் உள்ளூர் பேருந்துகள் இயக்கம் தொடங்கியது. இதனால் கிராமப்புறங்களில் இருந்து அதிகாலையில் நகர பகுதிக்கு வர வேண்டிய பயணிகள் பெரும் சிரமம் அடைந்தனர். அவர்கள் ஆட்டோக்களிலும், தனியார் வாகனங்களிலும் தான் நகர பகுதிக்கு வர வேண்டி உள்ளது.

இதை கருத்தில் கொண்டு ஸ்டே பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரத்திடமும் விவசாயிகள், வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து தற்போது ஸ்டே பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளனர். ஆனால் அந்தந்த ஊர்களில் அந்த பஸ்கள் நிற்காமல், அதிகாலையில் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் வகையில் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அருமநல்லூர், காட்டுப்புதூர், கேசவன்புதூர் பகுதிகளில் இருந்து அதிகாலை பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி அருமநல்லூர் பஸ்கள், அதிகாலை 4 மணிக்கு அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு 5 மணிக்கு அருமநல்லூர் செல்லும். பின்னர் அங்கிருந்து 6 மணிக்குள் நாகர்கோவில் வரும் வகையில் புறப்பட்டு வரும்.

காட்டுப்புதூர் பஸ், அண்ணா பஸ் நிலையத்தில் இருந்த அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு, 4.45க்கு காட்டுப்புதூர் சென்றடையும். பின்னர் காலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, காலை 6 மணிக்குள் அண்ணா பஸ் நிலையம் வரும். கேசவன்புதூர் பஸ், அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து அதிகாலை 4.15க்கு புறப்பட்டு, 5.05க்கு  கேசவன்புதூர் செல்லும். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காலை 6.20க்குள் அண்ணா பஸ் நிலையம் வரும். இதன் மூலம் மேற்கண்ட பகுதிகளில் உள்ளவர்கள் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அதிகாலை பஸ்கள் மூலம் நாகர்கோவில் வந்தடைய முடியும். குறிப்பாக விவசாயிகள், விளை பொருட்களை எளிதில் கொண்டு வர உதவியாக இருக்கும் என அதிகாரிகள் கூறினர்.

Tags : Kumari ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...