×

குமரியில் 1325 வழக்குகள் பதிவு

நாகர்கோவில், டிச.29 : புத்தாண்டு வர இருப்பதால், அசம்பாவித சம்பவங்கள், விபத்துக்களை தவிர்க்க குமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. போலீசார் தீவிர வாகன சோதனையும் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கட்டுப்படுத்த இந்த வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன் தினம் மாவட்டம் முழுவதும் போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் நாகர்கோவில் சப்-டிவிஷனில் 377, தக்கலை 489, குளச்சல் 284, கன்னியாகுமரி 175 என 1,325 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் இருச்சக்கர வாகனத்தில் ஹெல்மட் அணியாமல் மாட்டிக்கொண்டவர்கள் 485 பேர், கார்களில் சீட்பெல்ட் அணியாமல் சிக்கியவர்கள் 66 பேர் ஆவர்.

இந்த நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவுபடி வாகனங்களில் தேவையற்ற கூடுதல் உதிரிப்பாகங்களை பொருத்தி உள்ளவர்கள் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லையேல் அதற்கும் சேர்த்து வழக்குப்பதிவு செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே காவல்துறை மற்றும் வருவாய்த்துறை உள்பட அனைத்து அரசு துறைகளிலும் பயன்படுத்தப்படும் அரசு வாகனங்களிலும் பம்பர்கள் உட்பட ‘எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ்’களை உடனடியாக அகற்ற தலைமை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இதையடுத்து காவல்துறை, வருவாய்த்துறை உட்பட அனைத்துத்துறை அரசு அலுவலகங்களிலும் கார்களில் உள்ள பம்பர்கள் அகற்றப்பட உள்ளன. இரு நாட்களுக்குள் இந்த உத்தரவை செயல்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Tags : Kumari ,
× RELATED சித்திரை மாத பிறப்பையொட்டி குமரி...