×

கொரோனா தடுப்பூசி போட 500 பேருக்கு முதற்கட்ட பயிற்சி நிறைவு: அதிகாரிகள் தகவல்

வேலூர், டிச. 29: வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட 500 பேருக்கு முதற்கட்ட பயிற்சி நிறைவு பெற்றுள்ளதாகவும், விரைவில் 2ம் கட்ட பயிற்சி தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு கொண்டுவந்ததும், அதனை பொது மக்களுக்கு வழங்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். எனவே அதற்கான ஆயத்தப்பணிகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.

அதன்படி, தமிழகத்தில் மாநில, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு முன்களப்பணியாளர்களின் பட்டியல் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. இந்தியாவில் கோவாக்சின், கோவி ஷீல்டு உள்ளிட்ட தடுப்பூசிகள் 3வது கட்ட பரிசோதனையில் உள்ளது. மேலும், இவற்றை அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என்று இந்த நிறுவனங்கள் மத்திய மருந்துத்தர கட்டுப்பாட்டு நிறுவனத்திற்கு விண்ணப்பித்துள்ளன. இதற்கு அனுமதி கிடைக்கும்பட்சத்தில் விரைவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது. இதுதொடர்பாக, மத்திய அரசு ஒவ்வொரு மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.

தமிழகத்தில் 5 லட்சம் பேருக்கு முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் ஆகியோருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2வது கட்டமாக மத்திய, மாநில காவல்துறை அதிகாரிகள், சிவில் பாதுகாப்பு துறையை சேர்ந்தவர்கள், உள்ளாட்சி துறை பணியாளர்கள் பேரிடர் மேலாண்மை ஊழியர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும். இதற்கு அடுத்தக்கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்டோர்கள் மற்றும் இணை நோய்க ள் உள்ளவர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் முன்கள பணியாளர்கள் 15 ஆயிரம் பேருக்கு முதல்கட்டமாக தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டு அவர்களின் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சுகாதார துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஆன்லைனில் முதற்கட்ட பயிற்சி முடிவடைந்துள்ளது. விரைவில் 2ம் கட்ட பயிற்சி தொடங்கப்பட உள்ளது. தடுப்பூசி மருந்தை எவ்வாறு கையாளுவது, அதனை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது பாதுகாப்பாக வைப்பது தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 500 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு மருந்தின் அளவு பொறுத்தே பயிற்சி பெறுபவர்களின் அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது’ என்றனர்.

Tags :
× RELATED குடும்ப பிரச்னையால் பெண்...