527 கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்: கலெக்டர் தகவல்

வேலூர், டிச.29: வேலூர் மாவட்டத்தில் மேலும் கூடுதலாக 527 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார். தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணிகள் நிறைவடைந்து. தொடர்ந்து நேற்று, மாதிரி வாக்குப்பதிவு பணியை கலெக்டர் சண்முகசுந்தரம் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வாக்குப்பதிவு இயந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவு செய்து சரிபார்க்கும் பணி நடந்து வந்தது. இவற்றில் மொத்தமுள்ள 2,378 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு இயந்திரத்தில் 139 பழுதாகியுள்ளது. 3,094 வாக்குப்பதிவு இயந்திரத்தில் 17 இயந்திரங்களும், 2,549 விவிபேடில் 199ம் பழுதாகியுள்ளது. பழுதான கருவிகள் தேர்தலில் பயன்படுத்த மாட்டோம். மாதிரி வாக்குப்பதிவையொட்டி, ஒவ்வொரு வாக்குப்பதிவு இயந்திரத்திலும் ஆயிரம் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவை கட்டுப்பாட்டு கருவி, விவி பேடுகள் மூலம் சரிபார்க்கப்படும். ஆய்வில் வித்தியாசம் இருந்தால் அந்த கருவிகளில் மீண்டும் மாதிரி வாக்குப்பதிவு ெசய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பணிகள் இன்று (நேற்றுடன்) நிறைவு பெறும்.

மாவட்டத்தில் தற்போது 1,301 வாக்குச்சாவடிகள் உள்ளது. தற்போது ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற கணக்கீட்டின்படி, கூடுதலாக 527 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 20 சதவீதம் கூடுதலாகவே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>