ஏரல் அருகே டிரைவர் கொலையில் 2 பேர் கைது முன்விரோதத்தில் கொன்றதாக வாக்குமூலம்

ஏரல், டிச. 29: ஏரல் அருகே டிரைவர் கொலையில் போலீசார் 2 பேரை கைது செய்தனர். சகோதரனை தாக்கியதால் ஏற்பட்ட முன்விரோதத்தில் டிரைவரை அடித்து கொன்றதாக பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள பண்டாரவிளை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ஞானையா மகன் செல்வக்குமார் என்ற செல்லக்குட்டி (37). டிரைவரான இவருக்கு ரூத்சாந்தா (35) என்ற மனைவியும், ஜேம்ஸ் (10) என்ற மகனும், ஜெனிபா (7) என்ற மகளும் உள்ளனர். செல்லகுட்டி தற்போது ஏரலில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பண்டாரவிளை ஊருக்கு அருகேயுள்ள அய்யன் கோயில் பக்கம் பனங்காட்டு பகுதியில் தலையில் பலத்த காயத்துடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து அவரது அண்ணன் ஆரோன் (40) ஏரல் போலீசில் புகார் செய்ததையடுத்து இன்ஸ்பெக்டர் முத்துலெட்சுமி, எஸ்.ஐக்கள் முருகபெருமாள், பாலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்லக்குட்டி உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் செல்லக்குட்டியை முன்விரோதத்தில் அதே ஊரை சேர்ந்த துரைப்பாண்டி மகன்கள் பட்டுபாண்டி, அருண்குமார் என்ற பெருமாள் ஆகியோர் சேர்ந்து அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இந்நிலையில் நேற்று மதியம் ஏரல் இன்ஸ்பெக்டர் முத்துலெட்சுமி தலைமையில் எஸ்.ஐ முருகபெருமாள் மற்றும் போலீசார் பெருங்குளம் குளத்து சாலையில் செல்லும் போது பைக்கில் வந்த துரைப்பாண்டி மகன்கள் பட்டுபாண்டி மற்றும் அருண்குமார் என்ற பெருமாள் ஆகியோரை கைது செய்து ஏரல் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் வருமாறு; எங்களது சகோதரர் உத்திரகுமாரை கடந்த ஒரு வருடத்திற்கு முன் செல்லக்குட்டி தகராறு செய்து தாக்கினார். இதில் ஏற்பட்ட முன்விரோத்தினால் நாங்கள் செல்லக்குட்டியை தீர்த்து கட்ட முடிவு செய்தோம். அதன்படி சம்பவத்தன்று கம்பி மற்றும் கம்பால் அவரை அடித்தோம். இதில் அவர் இறந்தார். பின்னர் நாங்கள் தப்பிய நிலையில் போலீசார் எங்களை கைது செய்தனர். இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories:

>