×

எதிர்க்கட்சிகள் கண்ணை மூடிக் கொண்டால் ஆட்சியின் சாதனை எப்படி தெரியும்? முதல்வர் நாராயணசாமி பரபரப்பு பேச்சு

புதுச்சேரி, டிச. 29: எதிர்கட்சிகள் கண்ணை மூடிக் கொண்டால் ஆட்சியின் சாதனை எப்படி தெரியும்? என முதல்வர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி சார்பில் காங்கிரஸ் பேரியக்கத்தின் 136வது ஆண்டு துவக்க விழா நேற்று நடந்தது. கட்சி அலுவலகத்தில் துவங்கிய பேரணி அண்ணா சாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக சென்று கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகே நிறைவடைந்தது.  கட்சி தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தலைமை தாங்கினார். இதில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், வைத்திலிங்கம் எம்பி, காங்., தேசிய செயலாளர் சஞ்சய் தத், எம்எல்ஏக்கள் லட்சுமிநாராயணன், ஜான்குமார், ஜெயமூர்த்தி, துணை தலைவர்கள் தேவதாஸ், நீல.கங்காதரன், பொதுச்செயலாளர் ஏகேடி. ஆறுமுகம் மற்றும் காங்., நிர்வாகிகள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: பிரதமர் மோடி மாநில வளர்ச்சிக்கு குந்தகம் விளைவித்து வருகிறார். அவருடன் கிரண்பேடியும் இணைந்து வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறார். இவர்களுக்கு ஆதரவாக என்ஆர் காங்கிரசும், அதிமுகவும் இருக்கிறது. மக்கள் நலத்திட்டங்களுக்கு தடை போடும் போது எதிர்க்கட்சிகள் வாய் மூடி மவுனியாக இருக்கின்றன.

தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் ஆட்சியில் என்ன? செய்தார்கள்? என்று எதிர்க்கட்சிகள் கேட்கின்றன. அரும்பார்த்தபுரம் மேம்பாலம், நூறடி சாலை மேம்பாலத்தை திறந்துள்ளோம். மேரி கட்டிடம், காமராஜர் மணி மண்டபம், திருக்காஞ்சி பாலத்தை  கட்டி திறக்கவுள்ளோம். எதிர்க்கட்சிகள் கண்ணை திறந்து பார்த்தால்தான் ஆட்சியின் சாதனைகள் தெரியும். கண்ணை மூடி கொண்டால் எப்படி தெரியும்? உள்ளாட்சி தேர்தலை ஏன்  நடத்தவில்லை என பிரதமர் கூறுகிறார்.  2014ம் ஆண்டு பாஜகவின் கூட்டணி கட்சியான என்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது பிரதமர் இது பற்றி ஏன் பேசவில்லை? தற்போதைய உள்ளாட்சி தேர்தல் காலதாமதத்துக்கு கவர்னர்தான் பொறுப்பு.  

கண்ணை மூடிக்கொண்டால் அடுத்த நிமிடத்திலே புதுச்சேரியில் சட்டமன்றம் இல்லா யூனியன் பிரதேசமாக ஆக்கிவிடுவார்கள்.  எந்த கொம்பன் வந்தாலும், மாநில சுயாட்சியை பறிக்க முடியாது. ஜனநாயகம் பற்றி ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? என பிரதமரிடம் கேள்வி எழுப்பினேன். அதற்கு பேச்சையும், மூச்சையும் காணோம். பாஜகவினர் கட்சி நடத்துகிறார்களா? இல்லை கம்பெனி நடத்துகிறார்களா? பாஜக இந்து கட்சி என்று கூறிவருகிறது. அதே நேரத்தில் கவர்னர் இந்துக்களின் சனிப்பெயர்ச்சி விழா நடக்கக் கூடாது என்கிறார்.

பாஜகவுக்கு சூடு, சொரணை, மானம், மரியாதை இருந்தால் புதுவையில் ஒரு நிமிடமாவது கவர்னரை வைத்திருக்கலாமா? கவர்னருக்கு ஜால்ரா அடிக்கும்  பாஜக ஒரு கட்சியா?  தட்ட, தட்டத்தான் பந்து உயரும், திட்ட... திட்டத்தான் நான் மேலே செல்வேன். என்னை ஒன்றும் செய்ய முடியாது. மீறி போனால் சிறையில் போடுவார்கள். அதற்கும் தயாராகவுள்ளேன்.  இந்த பதவி எனக்கு முக்கியமே கிடையாது, காங்கிரஸ் கொடிதான் முக்கியம். இருந்தாலும், இறந்தாலும் காங்., கொடியோடுதான் செல்வேன்.   மத்திய அரசு கொடுக்கும் தொல்லையால் கட்சிக்காரர்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. அதனை நான் ஏற்றுக் கொள்கிறேன். வரும் தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி வந்தால்தான் புதுச்சேரி மாநிலம் காப்பாற்றப்படும். தலைமைக்கு யார் வருகிறார். யார் வரவில்லை? என்பது முக்கியமில்லை.  காங்கிரஸ் கட்சி தலைமையில் ஆட்சி வந்தால்தான் புதுச்சேரியின் தனித்தன்மை காக்கப்படும். இல்லையென்றால்  தமிழகத்துடன் இணைத்து விடுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : opposition ,Narayanasamy ,
× RELATED தேனி தொகுதி அதிமுக வேட்பாளர், கட்சி...