×

தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 கொள்ளையர்கள் கைது 55 பவுன் நகைகள் பறிமுதல்

வானூர், டிச. 29: வானூர் தாலுகா ஆரோவில் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையர்கள் திருடிச்சென்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியை சேர்ந்த சசிகுமார் வீட்டில் 39 பவுன் நகைகளை கொள்ளையர்கள் திருடிச்சென்றனர்.

இதுபோல் 7 இடங்களில் கைவரிசை காட்டியுள்ளனர். இதையடுத்து விழுப்புரம் எஸ்.பி. ராதாகிருஷ்ணன் நடவடிக்கை மேற்கொண்டதின்பேரில் கோட்டக்குப்பம் டி.எஸ்.பி. அஜய்தங்கம் மேற்பார்வையில் ஆரோவில் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், விஜயகுமார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடினர். அப்போது கொள்ளையர்கள் பயன்படுத்திய செல்போன் சிக்னலை வைத்து விசாரித்தபோது கர்நாடகா மாநிலம் மைசூர் மாண்டியா மற்றும் வேலூர் பகுதியில் திருட்டு வழக்கில் ஈடுபட்ட புதுச்சேரி மாநிலம் கரிக்கலாம்பாக்கம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன்(எ)ரவிக்குமார்(47), வேலூர் மாவட்டம் கருகம்புத்தூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம்(எ) கார்த்திக்(55) என தெரிந்தது. இதையடுத்து நேற்று போலீசார் 2 பேரை  கைது செய்து அவர்களிடமிருந்து 55 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து எஸ்.பி. ராதாகிருஷ்ணன் கூறியபோது, ஆரோவில் பகுதிகளில் குற்ற சம்பவங்களை நடைபெறாவண்ணம் காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் கஞ்சா விற்பனை செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் ஒத்துழைப்புடன் சிசிடிவி கேமரா பொருத்துவதின் மூலம் குற்றச்சம்பவங்களை தடுக்க முடியும் என்றார்.

Tags : robbers ,theft ,jewelery ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...