×

கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது: தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 2024-25 ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்), கருணைத்தொகை 2025-26ல் வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி, போனஸ் சட்டத்தின் கீழ் வரும் கூட்டுறவு சங்கங்களில் ஒதுக்கப்படக்கூடிய உபரித் தொகையை கணக்கில் கொண்டு அச்சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20 சதவீதம் வரை மிகை ஊதியம் வழங்கப்படும். உபரி தொகை இல்லாமல் உள்ள சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்கு ஏதுவாக 10 சதவீதம் மிகை ஊதியம் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும்.

குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்கள் பணிபுரிந்து போனஸ் சட்டத்தின் கீழ் வராத நிகர லாபம் ஈட்டும் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20 சதவீதம் வரை மிகை ஊதியம், கருணைத்தொகை வழங்கப்படும்.
இந்த சட்டத்தின் கீழ் வராத நிகர லாபம் ஈட்டாத தலைமை சங்கங்கள், ஒன்றிய சங்கங்களாக இருப்பின் அவற்றில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.3000-ம், தொடக்க சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.2,400ம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கருணைத் தொகையாக வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் 44,081 பணியாளர்களுக்கு ரூ.44 கோடியே 11 லட்சம் மிகை ஊதியம், கருணைத் தொகை வழங்கப்படவுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் மிகவும் ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும், ஊக்கத்துடனும் பணியாற்றுவதையும் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதை உறுதிசெய்திட வழிவகை செய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu government ,Chennai ,Tamil Nadu ,
× RELATED எனக்கு எவ்வளவு சொத்து இருக்குனு தெரியுமா…? ஐகோர்ட்டில் ஓபிஎஸ் பகீர்