காலமுறை ஊதியம் வழங்கக்கோரி ஏஐடியூசி பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், டிச.29: உள்ளாட்சி பணியாளர்களை பணிநிரந்தரம் செய்து அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி உள்ளாட்சி பணியாளர்கள் சங்கத்தினர் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிராம ஊராட்சிகளில் வேலை பார்க்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக் குனர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களை பணி நிரந்தரம் செய்து அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபட்ட உள்ளாட்சி பணியாளர்களுக்கு அரசு அறிவித்த சிறப்பு ஊதியத்தை உடனே வழங்க வேண்டும், 6வது மற்றும் 7 வது ஊதியக்குழு பரிந்துரைப்படி பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் நிலுவை தொகைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி உள்ளாட்சி பணியாளர்கள் சங்கம் சார்பில் திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன் சங்கத்தின் மாவட்ட தலைவர் சாந்தகுமார் தலைமையில் ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி மாவட்ட செயலாளர் சந்திரசேகர ஆசாத், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்கள் சங்க மாவட்ட பொருளாளர் நேரு, வியாபாரிகள் சங்க நிர்வாகி செல்வம் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்ட உள்ளாட்சி பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Related Stories: