அரியலூர் மாவட்டத்தில் இணையதளம் வாயிலாக மக்கள் குறைதீர் கூட்டம்

அரியலூர், டிச. 29: பொது போக்குவரத்து, இ-பாஸ் ரத்து உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளதன் அடிப்படையில் பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றும் வகையில் அரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் (https://ariyalur.nic.in)ல் என்ற இணையதளத்தில் கூகுள் மீட் என்ற இணைப்பு மூலம் காணொளி காட்சி வாயிலாக பொதுமக்கள் கலெக்டரை நேரடியாக தொடர்பு கொண்டு தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்க வசதி செய்யப்பட்டிருந்தது. மேலும் இணையவழி வசதி இல்லாத பொதுமக்கள் தங்கள் கிராமத்துக்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செயல்பட்டு வரும் பொது சேவை மையங்கள் மூலம் தங்களது கோரிக்கைகள் மனுக்கள் அளிக்க வசதி செய்யப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் நேற்று இணையவழி மூலம் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை மற்றும் இதர உதவித்தொகைகள், பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 47 மனுக்கள் இணையதளம் வழியாக பெறப்பட்டுள்ளது. பொதுமக்கள் தெரிவித்த கோரிக்கைகள் தொடர்பாக கேட்டறிந்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கலெக்டர் ரத்னா கூறினார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டு அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. தொடர்ந்து, வாட்ஸ் அப் மூலமும் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னுலாப்தீன், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஏழுமலை, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Related Stories:

>