×

தீபாவளி ஸ்பெஷல் பர்ஃபிக்கள்!

தீபாவளி என்றாலே பட்டாசு, புதுத் துணி, இனிப்புதான். ஆனால், பட்டாசை தீபாவளி அன்றே வெடித்து தீர்த்து விடுவோம். புதுத் துணியை மாலை அல்லது மறுநாள் கழற்றி விடுவோம். இனிப்பு மட்டும்தான் தீபாவளி முடிந்த பிறகும் 2 அல்லது 3 நாள் கழித்தும் சாப்பிடலாம். அப்படிப்பட்ட இனிப்பு பலகாரத்தை செய்து வீட்டில் உள்ளோரையும், வரும் விருந்தினரையும் அசத்த பல புதுமையான பர்ஃபி வகைகளை தோழி வாசகியர்களுக்காக அளித்துள்ளார் சமையல் கலைஞர் குப்பம்மாள்.

பச்சைப் பயறு பர்ஃபி

தேவையானவை:

முளைக்கட்டிய பச்சைப் பயறு,
சர்க்கரை – தலா 200 கிராம்,
ஏலக்காய் தூள் – ½ டீஸ்பூன்,
நெய் – 5 ஸ்பூன்.

செய்முறை:

முளைக்கட்டிய பச்சைப் பயறை தண்ணீர் விடாமல் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். அதை இட்லி குக்கரில் ஆவியில் வேகவிட்டு ஆறவிடவும். ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை கொட்டி, சிறிது தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து, கம்பி பதத்தில் பாகு வந்ததும் அரைத்த விழுது, ஏலப்பொடி, நெய் சேர்த்து சிறு தீயில் கிளறவும். தளர்வான பதம் வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவும்.

தயிர் வெஜிடபிள் பர்ஃபி

தேவையானவை:

தயிர் – 1 கப்,
காய்கறி விழுது (கேரட், பீன்ஸ், மஞ்சள் பூசணி,
பீட்ரூட் வேகவைத்து அரைத்தது) – ½ கப்,
சர்க்கரை – 2 கப்,
நெய் – ¼ கப்,
துருவிய பாதாம், முந்திரி – ¼ கப், வெனிலா எசன்ஸ் – ½ டீஸ்பூன்.

செய்முறை:

அடிகனமான பாத்திரத்தில் காய்கறி விழுது, தயிர், சர்க்கரை சேர்த்துக் கலந்து அடுப்பில் வைத்துக் கிளறவும். கலவைக் கெட்டியாக வரும் போது நெய் சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும். கலவை சுருண்டு வரும் போது எசன்ஸ் சேர்த்து கிளறி, நெய் தடவிய தட்டில் பர்ஃபி மேலே துருவிய முந்திரி, பாதாம் தூவிப் பரப்பவும். சற்று ஆறியதும் வில்லைகள் போடவும். சற்று புளிப்புச் சுவையுடன் பர்ஃபி வித்தியாசமாக இருக்கும்.

தயிர் பர்ஃபி

தேவையானவை:

பால் – ½ லிட்டர்,
சர்க்கரை – 500 கிராம்,
ஏலக்காய் தூள் – ½ டீஸ்பூன்.

செய்முறை:

பாலைக் காய்ச்சி தயிராக தோய வைக்கவும். மறுநாள் நன்றாக உறைந்ததும் அதை ஒரு வெள்ளை துணியில் கட்டித் தொங்க விடவும். தயிரிலுள்ள தண்ணீர் முழுவதும் வடிந்த பின் தயிர் விழுதை மட்டும் எடுத்து வைத்துக் ெகாள்ளவும். ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை போதிய அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். சர்க்கரை கரைந்து கொதித்துக் கம்பி பதம் வந்ததும், தயிர் விழுதை போட்டு, சிறு தீயில் அடிபிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும். தயிர் முழுவதும், சர்க்கரை பாகும் சேர்ந்து கெட்டியானதும் ஏலக்காய் தூள் தூவி கீழே இறக்கி தாம்பாளத்தில் கொட்டி ஆறிய பின் துண்டுகள் போடவும்.

காபி பர்ஃபி

தேவையானவை:

பால் – 3 டம்ளர்,
திக்கான காபி டிகாக் ஷன் – 1 டம்ளர்,
சர்க்கரை – ¾ டம்ளர்,
வெண்ணெய் – 200 கிராம்,
நெய் – 1 டீஸ்பூன்.

செய்முறை:

பால், காபி டிகாக் ஷன், சர்க்கரை, வெண்ணெய் எல்லாம் கலந்து கனமான பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து கிளறிக் கொண்டே இருக்கவும். முதலில் நன்றாக தீ எரிய விட்டு கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். பாதிப் பால் வற்றிய பிறகு சிறிது தீயைக் குறைத்துக் கொண்டு கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் மைசூர் பாகு போல் குபு குபு என்று நுறைத்து வரும் போது நெய் தடவிய தட்டில் வேண்டிய அளவு கனமாக கொட்ட வேண்டும். ஆறிய பின்பு வில்லைகள் போடவும்.

ரவை பால் கலந்த பர்ஃபி

தேவையானவை:

பால் – 4 கப்,
சர்க்கரை – 3 கப்,
தேங்காய் துருவல் – 1 கப்,
டால்டா – ¾ கப்,
வெள்ளை ரவை – ½ கப்,
ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன்,
ரோஸ் எசன்ஸ் – சில துளி,
நெய் – 1 டீஸ்பூன்.

செய்முறை:

கனமான பாத்திரத்தில் பால், சர்க்கரை, தேங்காய் துருவல், டால்டா, ரவை எல்லாம் ஒன்றாகப் போட்டு சிறு தீயில் கிளறிக் கொண்டே இருக்கவும். பாத்திரத்தில் ஒட்டாமல் புசுபுசுவென்று வரும் போது ஏலக்காய் தூள், எசன்ஸ் சேர்த்து நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறிய பின் வில்லைகள் போடவும்.

வெரைட்டி பர்ஃபி

தேவையானவை:

வேர்க்கடலை வறுத்து, தோல் நீக்கி,
மாவாக அரைத்தது – 2 கப்,
வறுத்து மாவாக்கிய ரவை – 4 டீஸ்பூன்,
சர்க்கரை – 250 கிராம்,
காய்ச்சிய பால் – ¼ லிட்டர்,
நெய் – 300 கிராம்,
தேங்காய் – ½ மூடி (துருவியது),
நெய்யில் வறுத்த முந்திரி – 10 (பொடித்தது).

செய்முறை:

அடுப்பில் கனமான பாத்திரம் வைத்து அதில் அரைத்த வேர்க்கடலை, ரவை, சர்க்கரை, தேங்காய் துருவல் சேர்த்து கலந்து பிறகு பால் ஊற்றி கைவிடாமல் கிளறவும். சிறிது நெய்விட்டு சுருண்டு மேலே பூத்து வரும். பாத்திரத்தில் ஒட்டாமல் நெய் மிதந்து வரும் போது நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும் டைமண்ட் ஷேப்பில் வில்லைகள் போடவும். முந்திரியை தட்டில் கொட்டி பர்ஃபி மேல் வைத்து அழுத்தவும்.

பனங்கிழங்கு பர்ஃபி

தேவையானவை:

வேகவைத்து துருவிய பனங்கிழங்கு – 1 கப்,
தேங்காய் துருவல் – 1 கப்,
சர்க்கரை – 1½ கப், நெய் – 2 டேபிள் ஸ்பூன்,
ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன்,
காய்ச்சிய பால் – ¼ கப்,
குங்குமப்பூ சிறிதளவு.

செய்முறை:

ஒரு வாணலியில் நெய் ஊற்றி, அடுப்பில் வைத்து தேங்காய் துருவலைப் போட்டு சிறிது நேரம் வறுத்து பனங்கிழங்கு துருவலையும் போட்டு ஒரு கிளறுக் கிளறி, சர்க்கரை சேர்க்கவும். பிறகு பால் சேர்த்து நன்றாகக் கிளறவும். ஏலக்காய் தூள், குங்குமப்பூ போட்டு கலந்து பந்து போல் திரண்டு வரும் போது இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி வில்லைகளாக கட் பண்ணவும்.

வெந்தய பர்ஃபி

தேவையானவை:

வெந்தயம் – 4 டீஸ்பூன்,
புழுங்கல் அரிசி – 2 கப்,
உளுத்தம் பருப்பு – ½ கப்,
கருப்பட்டி – 1½ கப்,
கேரட், பீட்ரூட், தேங்காய் துருவல் – ½ கப்,
வெள்ளரி விதை 3 டீஸ்பூன்,
நெய் – 100 கிராம்,
ஏலக்காய் தூள் – ½ டீஸ்பூன்.

செய்முறை:

அரிசி தனியாகவும், உளுத்தம் பருப்பு, வெந்தயம் கலந்து தண்ணீர் விட்டு ஒரு மணி நேரம் ஊறவைத்து, தனித்தனியாக தண்ணீர் தெளித்து நைஸாக அரைத்து எடுத்து ஒன்றாகக் கலக்கவும். நெய்யில் வெள்ளரி விதை, கேரட், பீட்ரூட், தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக வறுத்து ஏலக்காய் தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறியவுடன் பாதிக் கருப்பட்டிச் சேர்த்து கலந்து வைக்கவும். மீதியை அரைத்த மாவுடன் பிசைந்து வைக்கவும். குக்கரில் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். பாத்திரத்தில் நெய் தடவி வெல்லம் கலந்த மாவைக் கொட்டி, பரத்தி மாவின் மேல் வறுத்தக் கலவையை தூவி குக்கரில் வைத்து மூடி வெயிட் போடாமல் வேக விடவும். ஆறிய பின் எடுத்து வில்லைகள் போட சத்துள்ள பர்ஃபி ரெடி.

பனீர் பர்ஃபி

தேவையானவை:

பனீர், பால் பவுடர், பால், சர்க்கரை – தலா 1 கப்,
ஏலக்காய் தூள் – ¼ டீஸ்பூன்,
பிஸ்தா – 1 டீஸ்பூன்,
வெண்ணெய், நறுக்கிய பாதாம், முந்திரி, டூட்டி ஃப்ரூட்டி – தலா 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

பனீரை துருவி ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் சர்க்கரையைச் சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும். பாலுடன் பால் பவுடரைச் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்து பனீருடன் சேர்த்துக் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் பதம் வந்தவுடன் இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டவும். நறுக்கிய பருப்புகள் மற்றும் டூட்டி ஃப்ரூட்டியை மேலாக தூவி ஆறியதும் துண்டுகள் போடவும்.

கடலை மாவு தேங்காய் கலந்த பர்ஃபி

தேவையானவை:

கடலை மாவு – 1 கப்,
தேங்காய் துருவல் – ½ கப்,
பால் – ½ கப்,
சர்க்கரை – 1½ கப்,
நெய் – ¾ கப்.

செய்முறை:

கனமான பாத்திரத்தில் பால், துருவிய தேங்காய், சர்க்கரை, கடலை மாவு எல்லாம் ஒன்றாக கலந்து அடுப்பில் வைத்துக் கிளறவும். நெய்யை உருக்கி வைத்துக் கொண்டு பாத்திரத்தில் உள்ள கலவை சிறிது கெட்டியானவுடன் சிறிது சிறிதாக நெய் விட்டுக் கிளறிக் கொண்டே இருக்கவும். எல்லாம் கெட்டியாக மைசூர் பாகு போல் பொங்கி வரும் போது சிறிது கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறிய பின் வில்லை போடவும்.

 

Tags : Diwali ,Diwali day ,
× RELATED ரவை ஆம்லெட் தோசை