×

கட்டளை கிராமத்தில் அனுமதியின்றி அமைக்கப்படும் 2 ராட்சத கிணறு

கரூர், டிச.29: கட்டளை கிராமத்தில் அனுமதியின்றி அமைக்கப்படும் 2 ராட்சதகிணறுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். கரூர் மாவட்டம் ரெங்கநாதபுரம் ஊராட்சி, கட்டளை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் வழங்கப்பட்ட மனுவில் தெரிவித்துள்ளதாவது:கட்டளை பகுதியில் ஆயிரக்கணக்கான நன்செய் நிலங்களில் காலங்காலமாக விவசாயம் செய்து வருகிறோம். கட்டளை கிராமத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான டன் நெல் அரசு கொள்முதல் செய்து வருகிறது. இந்த பகுதியில் மட்டும் 20க்கும் மேற்பட்ட நீரேற்று நிலையங்கள் 24மணி நேரமும் செயல்படுகிறது.

மேலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கரூர் மாவட்டம் நகராட்சி, பேரூராட்சி, தாந்தோணிமலை, சணப்பிரட்டி, புலியூர், திண்டுக்கல், வடமதுரை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு இந்த பகுதியில் இருந்து குடிநீர் செல்கிறது. இதற்கே, கோடை காலங்களில் பற்றாக்குறை ஏற்படுகிறது.இந்நிலையில், கட்டளை கிராமத்தின் குறிப்பிட்ட பகுதியில் ராட்சத கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அரசு விதிமுறைகளின்படி சொந்த இடத்தில் சிறிய ஆழ்துளை கிணறோ அல்லது உறை கிணறு அமைத்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடம் அனுமதி பெற்றால் மட்டுமே அமைக்க முடியும். அதுவும் சம்பந்தப்பட்ட நிலத்தில் மட்டுமே அதனை பயன்படுத்த முடியும்.

ஆனால், எந்த அனுமதியும் இல்லாமல், இரண்டு ராட்சத கிணறுகள் அமைத்து அதில் 800எச்பி குதிரை திறன் கொண்ட மோட்டாரை பொருத்தி 20கிமீ தூரத்திற்கு குழாய்மூலம் நீரை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரிய வருகிறது. எனவே, இந்த திட்டத்திற்கு எந்த அனுமதியும் அரசு சார்பில் வழங்க கூடாது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் ஏராளமான பாதிப்புகள் ஏற்படும். எனவே, இதனை தடுத்து நிறுத்த தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : Command Village ,
× RELATED தென்காசி அருகே ஆட்டோ மீது வேன் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழப்பு