வேல் யாத்திரை நடத்த முயன்ற 8 பேர் கைது

திருப்போரூர்: அர்ஜூன் சம்பத் தலைமையில் இயங்கும் இந்து மக்கள் கட்சியின் சார்பில் திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில்  இருந்து மேலக்கோட்டையூர் வழியாக சைதாப்பேட்டை பாலசுப்பிர மணியர் கோயில் வரை வேல் யாத்திரை நடத்த அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது. இதற்கு போலீசார் தடை விதித்திருந்தனர். ஆனால் தடையை மீறி வேல் யாத்திரை நடத்தப்படும் என அந்த அமைப்பு தெரிவித்திருந்தது. இதையடுத்து திருப்போரூர் கோயிலைச் சுற்றி மாமல்லபுரம் போலீஸ் கூடுதல் எஸ்.பி. சுந்தரவதனம் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.  

நேற்று காலை 8 மணியளவில் காரில் வந்த மூன்று பேர் திருப்போரூர் பிரணவமலை அருகே தடுத்து நிறுத்தப்பட்டனர். விசாரணையில் அவர்கள் இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் ஆனந்தன் (46), மாநில் இளைஞர்அணி செயலாளர் வேலு (40), மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அரவிந்தன் (26) என்பதும் மூவரும்தான் வேல் யாத்திரை ஏற்பாடு செய்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மூவரையும் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த முத்து அரங்கசாமி (64), குமரவேல் (50), கணபதி (51), ஜனார்த்தனன் (37), ரமேஷ் (38) ஆகிய ஐந்து பேர் திருப்போரூர் காவல் நிலையம் அருகே வந்தனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: