×

தொழிலாளர்களின் கடின உழைப்பால் சேமித்த பணத்தை முடக்குவது மனிதத்தன்மையற்ற செயல்: ஒன்றிய அரசுக்கு கனிமொழி எம்பி கண்டனம்

சென்னை: தொழிலாளர்களின் கடின உழைப்பால் சேமித்த பணத்தை முடக்குவது மனிதத்தன்மையற்ற செயல் என்று ஒன்றிய அரசுக்கு கனிமொழி எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி, தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: பாஜ அரசின் புதிய இபிஎப்ஓ விதிகள் அதிர்ச்சி அளிப்பதோடு, உழைக்கும் மக்களுக்கு எதிரானதாகவுள்ளன.

மக்கள் தங்கள் சொந்த சேமிப்பை திரும்பப் பெறுவதற்கு ஒரு வருடம் முழுவதும் வேலையில்லாமல் இருக்க கட்டாயப்படுத்துவது, ஓய்வு பெறும் வரை அவர்களின் நிதியில் 25% சதவீதத்தை முடக்கிவைத்துக் கொள்வது, மேலும், ஓய்வூதியம் திரும்பப் பெறுவதை 3 ஆண்டுகள் தாமதப்படுத்துவது ஆகியவை கொடுமையானது. லட்சக்கணக்கானோர் ஏற்கனவே வேலை இழப்புகள் மற்றும் அதிகரித்து வரும் செலவுகளால் போராடி வரும் நிலையில், இந்த முடிவு ஒன்றிய அரசுக்கு இந்திய மக்கள் மீது அக்கறை இல்லாததைக் காட்டுகிறது.

நடுத்தர வர்க்கத்தின் நலனை பாதுகாப்பதிலிருந்து ஒன்றிய அரசு தவறி விட்டதை வெளிப்படுத்துகிறது. கடினமான சூழ்நிலைகளில் தொழிலாளர்களின் கடின உழைப்பால் சேமித்த பணத்தை முடக்குவது மனிதத்தன்மையற்ற செயல். இந்த மக்கள் விரோத மற்றும் கொடுமையான விதி மாற்றங்களை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். மேலும், அவற்றை உடனடியாக திரும்பப் பெறுமாறு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Kanimozhi MP ,Union Government ,Chennai ,Kanimozhi ,DMK ,Deputy General Secretary ,Parliamentary ,Group ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!