குடும்பம் நடத்திவிட்டு திருமணம் செய்ய மறுத்த டாக்டர் இஎஸ்ஐ பெண் டாக்டர் தற்கொலை முயற்சி: போலீசார் விசாரணை

சென்னை: இஎஸ்ஐ மருத்துவமனையின் மூத்த டாக்டர் தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு திருமணம் செய்ய மறுப்பதாக கூறி பாதிக்கப்பட்ட பெண் டாக்டர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கே.கே.நகரில் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரளாவை சேர்ந்தவர் ரோசா (27). டாக்டரான இவர், தற்போது சென்னை கே.கே.நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். அதே மருத்துவமனையில் அனுமன் (45) என்பவர் மூத்த டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர், கே.கே.நகர் பிருந்தாவனம் டவர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

அனுமனுக்கு திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தற்போது தனியாக வசித்து வருகிறார். இவருக்கும், ரோசாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு, நட்பாக பழகி வந்தனர்.

இந்நிலையில், கே.கே.நகரில் ரோசா தங்கியிருந்த பெண்கள் விடுதி, கொரோனா காலத்தில் மூடப்பட்டதால், தங்குவதற்கு இடம் கிடைக்காமல் தவிர்த்து வந்துள்ளார். ரயில் மற்றும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டதால் சொந்த மாநிலத்திற்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அப்போது, டாக்டர் அனுமன் எனது வீட்டில் நீ தங்கிக் கொள்ளலாம். உனக்கு பாதுகாப்பாக இருக்கும், என்று கூறியுள்ளார். அதன்படி, ரோசா அனுமனுடன் ஒரே வீட்டில் தங்கியுள்ளார். அப்போது, இவர்களின் நட்பு காதலாக மாறியது. அனுமன், மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவதால் ரோசாவை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். இதனால் இருவரும் கணவன் மனைவி போல் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், ரோசாவுக்கு அவரது வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் அனுமனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தியுள்ளார். ஆனால் டாக்டர் அனுமன் திருமணம் செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ரோசா தனது அறைக்கு சென்று மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த டாக்டர் அனுமன், ரோசாவை மீட்டு இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். தகவலறிந்து வந்த எம்ஜிஆர் நகர் போலீசார், டாக்டர் அனுமனிடம் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>