திருவான்மியூர் பகுதியில் கொகைன் விற்ற நைஜீரியர் கைது: ரூ.5.5 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்

துரைப்பாக்கம்: திருவான்மியூர் பகுதியில் கொகைன் போதைப்பொருள் விற்பனை செய்த நைஜீரியரை போலீசார் கைது செய்தனர். திருவான்மியூர் பகுதியில் இளைஞர்களை குறிவைத்து விலை உயர்ந்த போதைப் பொருளான கொகைன் விற்பனை நடைபெறுவதாக திருவான்மியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ராம சுந்தரம் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். கடந்த ஒரு வாரமாக, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த போலீசார், திருவான்மியூர் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமாக திரிந்த ஆசாமியை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால், காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், நைஜீரியாவை சேர்ந்த இப்ராஹிம் (57) என்பதும், நைஜீரியாவில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொகைன் போதை பொருளை கடத்தி வந்து, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் உள்பட பலருக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. அவரிடமிருந்து, சுமார் ரூ.5.50 லட்சம் மதிப்புள்ள சுமார் 55 கிராம் கொகைன் மற்றும் ரூ.65 ஆயிரம், பாஸ்போர்ட், நைஜீரியா செல்வதற்கான விமான டிக்கெட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>