×

மயானத்தை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு இறந்தவரின் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியல்: நெய்வேலி அருகே பரபரப்பு

நெய்வேலி, டிச. 28:  கடலூர் மாவட்டம், நெய்வேலி அடுத்த வடக்குத்து ஊராட்சியில் உள்ள கீழ்வடக்குத்து காலனியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள்  உயிரிழந்தால் அவர்களை கீழூர் சாலையில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்வது வழக்கம். இந்நிலையில் நேற்று கீழ் வடக்குத்து காலனியை சேர்ந்த அபூர்வம் என்பவர் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரது உடலை அடக்கம் செய்ய வழக்கம்போல் கீழூர் சாலையில் உள்ள மயானத்திற்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்குள்ள  மயானத்தில் உள்ள இடத்தில் சில தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வேலி வைத்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

 இதனால் மயானத்திற்கு சொந்தமான இடத்தில் உடல் அடக்கம் செய்ய போதுமான இடம் வசதிகள் இல்லை என கூறப்படுகிறது. இதை கண்டித்து இறந்தவரின் உறவினர்கள் உடலை அடக்கம் செய்யாமல் விக்கிரவண்டி-  கும்பகோணம் சென்னை செல்லும் சாலையில் உள்ள வடக்குத்து பேருந்து நிலையம் எதிரில் உடலை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த குறிஞ்சிப்பாடி ஒன்றிய குழு தலைவர் கலையரசி கோவிந்தராஜ், வடக்குத்து ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலை குப்புசாமி, நெய்வேலி நகர காவல் ஆய்வாளர் சாகுல்அமீது, கிராம நிர்வாக அலுவலர் சந்தானகிருஷ்ணன் உள்ளிட்டோர் மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 அதில், ஏற்கனவே அடக்க செய்த பழைய இடத்தில் உடலை அடக்கம் செய்வது எனவும் அங்குள்ள இடத்தில் விரைவில் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் வந்து ஆக்கிரமிப்பு செய்த இடத்தை அகற்றி தருவது எனவும் அல்லது புதிய  இடத்தில் மயானம் அமைத்து தருவது என உறுதி அளித்தனர். இதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு
ஏற்பட்டது.

Tags : cemetery ,individuals ,road ,deceased ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக...