×

வருசநாட்டில் வாரச்சந்தை அமையுமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

வருசநாடு, டிச. 28: வருசநாடு கிராமத்தில் வாரச்சந்தை அமைத்திட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வருசநாடு பகுதியில் 50க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் விளைகின்ற விவசாய விளைபொருட்களை ஆண்டிபட்டி, தேனி, மதுரை, கம்பம், திண்டுக்கல் போன்ற நகரங்களுக்கு விவசாயிகள் கொண்டு செல்வதில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. இதனால் ஒவ்வொரு வாரமும் வருசநாடு பகுதியில் விற்பனை செய்வதற்கு வசதியாக வாரச்சந்தை அமைத்திட வேண்டும் என விவசாயிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு வருசநாடு ஊராட்சி நிர்வாகம் சார்பில், வாரச்சந்தை அமைப்பது பற்றி ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து தலைமையில் பல இடங்களை ஆய்வு செய்து தேர்வு செய்து வைத்துள்ளனர். ஆனால் இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை என பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். இதனால் வருசநாடு கிராமத்தில் விரைவில் வாரச்சந்தை அமைத்து விவசாயிகளையும், பொதுமக்களையும் காக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சமூகஆர்வலர் ஆசிரியர் வேல்முருகன் கூறுகையில், ``வருசநாடு கிராமத்தில் வாரச்சந்தை அல்லது உழவர்சந்தை அமைத்தால் சுற்றியுள்ள கிராமப் பகுதி பொதுமக்கள் மிகவும் பயன் அடைவார்கள். இதனால் வருசநாடு ஒரு பெரிய வர்த்தக நகரமாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் விருதுநகர், மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து இணைக்கும் பாலமாக வருசநாடு செயல்பட்டு வருகிறது. எனவே, தேனி மாவட்ட கலெக்டர் விரைவில் வாரச்சந்தை அமைப்பதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் இதனால் பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் நன்மை அளிக்கும்’’ என தெரிவித்தார்.

Tags :
× RELATED திருநின்றவூர் செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை