×

எஸ்.காவனூரில் அச்சுறுத்தும் அங்கன்வாடி மையம்: சேதப்பகுதியை சீரமைக்க கோரிக்கை

பரமக்குடி, டிச.28:பரமக்குடி அருகே எஸ்.காவனூர் கிராமத்தில் கடந்த 1985ம் ஆண்டு கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் தற்போது 20 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக அங்கன்வாடி கட்டிடத்தின் மேல் பகுதியில் குறிப்பாக, சமையல் செய்யும் பகுதிக்கு மேற்பகுதி முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால், பெற்றோர்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்புவதற்கு மறுத்து வருகின்றனர்.

இதுகுறித்து, கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து கலெக்டர், கோட்டாட்சியர், வட்டாட்சியர், ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்ற அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காகவும் அல்லது சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டன. ஆனால், இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் மவுனம் சாதித்து வருகின்றனர்.
இதனால் எப்போது வேண்டுமானாலும் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளது.

குழந்தைகள் வந்து செல்லும் இந்த மையத்தின் சமையல் கூடத்தின் மேற்கூரை சரிந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் குழந்தைகளை மையத்திற்கு அனுப்பும் பெற்றோர் அச்சத்தில் உள்ளனர். மேற்கூரை ஒழுகுவதால் மழை காலத்தில் சமையலறை பகுதிகளில் சமைக்க முடியாமல், மாணவர்கள் அமர்ந்து உள்ள பகுதிகளில் சமைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், குடிநீர் இல்லாததால் அங்கன்வாடி மையத்தில் பொறுப்பாளர் தினமும் பணம் கொடுத்து குடிநீர் கொடுத்து வருகிறார். ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் ஆபத்தான கட்டடத்தை பார்வையிட்டு உடனடி சீரமைத்து, குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Anganwadi Center ,area ,
× RELATED வாலாஜாபாத் ஒன்றியம் அகரம் காலனியில்...