தேர் கடைகள், அன்னதானம், கலைநிகழ்ச்சி ரத்து கட்டுப்பாடுகளுடன் கோயில் பண்டிகைக்கு அனுமதி

குமாரபாளையம், டிச.28: செங்கமா முனியப்பன் கோயில் திருவிழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தேர்கடைகள் மற்றும் அன்னதானம், கலைநிகழ்ச்சிகளுக்கு அனுமதிக்கப்படவில்லை.குமாரபாளையம் அருகே, பல்லக்காபாளையம் செங்கமா முனியப்பன் கோயில் திருவிழா, ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். பல்லக்காபாளையத்தை அடுத்துள்ள சுற்றுப்புற கிராமங்களில் உள்ள முனியப்பன் சுவாமிகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, செங்கமா முனியப்பன் கோயிலில் பூஜைகள் நடத்தப்பட்டு, அந்தந்த கிராமங்களுக்கு மேள தாளத்துடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். பின்னர், அவரவர் கிராமங்களில் ஆடு -கோழி பலியிட்டு உறவினர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். கொரோனா ஊரடங்கு காரணமாக, இந்த ஆண்டு கோயில் பண்டிகை நடத்துவது குறித்து விழாக்குழுவினர் அரசுக்கு கடிதம் கொடுத்தனர். இதுதொடர்பாக குமாரபாளையம் தாசில்தார் தங்கம் முன்னிலையில், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் காவல்துறை, வருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத்துறை, கோயில் அறங்காவலர்கள் கலந்து கொண்டனர். வழக்கம்போல், ஜனவரி முதல் வாரத்தில் கோயில் திருவிழாவை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. வெளியூர்களிலிருந்து வருவோர், சந்தை திடலில் பொங்கல் வைக்கலாம். உள்ளூரைச் சேர்ந்தவர்கள் வீட்டிலேயே பொங்கல் வைத்து எடுத்து வரலாம். தீர்த்தம் எடுத்து வர 10 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அன்னதானம், கலை நிகழ்ச்சி, தேர் கடைகள் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை என அறிவுறுத்தப்பட்டது.

Related Stories:

>