×

பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி வழக்கு: சிவகங்கை கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு

மதுரை, டிச. 28: பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிய வழக்கில் கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே இந்தன்குளத்தைச் சேர்ந்த முத்து முருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எங்கள் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். மெயின் ரோட்டில் பொது போக்குவரத்திற்கான 60 அடி பாதை உள்ளது. இறந்தவர்களை இந்த பாதை வழியாகத்தான் கொண்டு செல்ேவாம்.

இதையொட்டி அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. தற்போது இந்த பொதுப் பாதை ஆக்கிரமிப்பில் உள்ளது. சிலர் வீடுகள் கட்டியுள்ளனர். இதேபோல் கடந்த 2011ல் ஆக்கிரமிப்புகள் ஏற்படுத்தப்பட்டன. இதை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இது தொடர்பான வழக்கில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் வழக்கு முடிக்கப்பட்டது. ஆனால், இறுதி ஊர்வலம் நடத்துவதற்கான பொதுப்பாதை தொடர்ந்து ஆக்கிரமிப்பில் தான் உள்ளது. இந்தப் பாதையில் யாரும் வரக்கூடாது என தடுக்கின்றனர். ரவுடிகள் மூலம் மிரட்டப்படும் சூழல் உள்ளது.

எனவே, பொதுப் பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டுமென மனு அளித்தாலும், அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. அரசியல் பின்புலம் இருப்பதால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே, நீதிமன்றம் தலையிட்டு பொதுப்பாதை மற்றும் புறம்போக்கு நிலத்திலுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டுமென உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், சிவகங்ைக கலெக்டர், இளையான்குடி தாசில்தார் மற்றும் பிடிஓ ஆகியோர் இந்த விவகாரத்தில் சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து தரப்பினரும் விளக்கமளிக்க வாய்ப்பளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.

Tags : removal ,Sivagangai Collector ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...