சனி பெயர்ச்சியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை

கிருஷ்ணகிரி, டிச.28: சனிபெயர்ச்சியை முன்னிட்டு மாவட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நவகிரகங்களில் ஒன்றான சனிபகவான், நேற்று காலை 5.22 மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி கிருஷ்ணகிரி தேவசமுத்திரத்தில் உள்ள காசி சனீஸ்வரன் கோயிலில், காலை 6 மணிக்கு கால பைரவருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து காசி சனீஸ்வர பகவானுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் பரிகார பூஜைகள் நடந்தது. மேலும் நவகிரக சாந்தி செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கருப்பு எள்ளை தலையில் சுற்றி, ஹோமத்தில் இட்டு பரிகார பூஜைகள் செய்து கொண்டனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில், சனிபகவானுக்கு நேற்று சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி ராசுவீதி பிரசன்ன பார்வதி சமேத சந்திர மவுலீஸ்வரர் கோயிலில், அதிகாலை நவகிரக அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Related Stories:

>