×

தர்மபுரி மாவட்டத்தில் தேசிய திறனாய்வு தேர்வை 2154 மாணவர் எழுதினர்

தர்மபுரி, டிச.28: தர்மபுரி மாவட்டத்தில் நேற்று நடந்த தேசிய திறனாய்வு தேர்வை, 18 மையங்களில் 2,154 மாணவ, மாணவிகள் எழுதினர். தர்மபுரி மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில், 10ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு நேற்று நடந்தது. 18 தேர்வு மையங்களில் 2154 மாணவ, மாணவிகள் எழுதினர். 80பேர் தேர்வு எழுதவரவில்லை. இத்தேர்வு காலை 9 மணி முதல் 11 மணிவரையும், 11.30 மணி முதல் 1.30 மணி வரையும் நடந்தது. கொரோனா நெறிமுறைகளுடன் மாணவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை, முதன்மை கல்வி அலுவலர் கீதா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கல்வி அதிகாரி சீனிவாசன், உதவி திட்ட அலுவலர் தங்கவேல் உள்ளிட்ட பறக்கும் படையினரும் அவ்வப்போது சோதனை நடத்தினர்.

இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறுகையில், ‘மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆராய்ச்சி படிப்பு வரை, கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான தேசிய திறனாய்வுத்தேர்வு, மாநில அளவில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பிளஸ் 1 மற்றும், பிளஸ்2 படிக்கும் காலங்களில் மாதந்தோறும் ₹1250, இளங்கலை, முதுகலை படிப்பு முடியும் வரை மாதந்தோறும் ₹2 ஆயிரம் என கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும். நடப்பாண்டில் நேற்று தர்மபுரி, பாலக்கோடு, அரூர் கல்வி மாவட்டத்தில் 18 தேர்வு மையங்களில் நடந்தது. மொத்தம் 2,154 மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர்,’ என்றார்.

Tags : National Performance Examination ,Dharmapuri district ,
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...