(வேலூர்) அணைக்கட்டு அடுத்த ஊசூர் அருகே கானாற்று ஓடையில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மணல் குவித்து வைத்து கடத்தல் புகார் அளித்தும் கண்டுகொள்ளாத அதிகாரிகள்

அணைக்கட்டு, டிச. 28: அணைக்கட்டு தாலுகா ஊசூர் அருகே கானாற்று ஓடையில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மணல் குவித்து வைத்து கடத்தல் ஜரூராக நடந்து வருகிறது. நிவர், புரெவி புயலின் போது பெய்த கனமழை காரணமாக அணைக்கட்டு தாலுகாவில் 5 ஆண்டுகளுக்கு முன்பு நிரம்பிய பல ஏரிகள் தற்போது நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும் கால்வாய் தூர்வாராமை, ஓடை நீர் வரத்து கால்வாய்களில் தனிநபர் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் ஊசூர் சுற்றுவட்டார பகுதியில் இதுவரை ஒரு ஏரி கூட நிரம்பி கோடி போகவில்லை என அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

இருப்பினும் ஓடைகளில் நீர் வந்து கொண்டிருப்பதால் ஏரிகள் நிரம்பிவிடும் என விவசாயிகள் காத்துகிடக்கின்றனர். இதில் ஊசூர் உள்வட்டாரத்திற்குட்பட்ட குருமலை மற்றும் சுற்றியுள்ள மலைஅடிவாரத்தில் நீர்வரத்து அதிகரித்து நீர்வீழ்ச்சி ஏற்பட்டு ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஏரிகளுக்கு சென்று கொண்டிருக்கிறது. அதன்படி அத்தியூர் மாரியம்மன்கோயில் அருகே கலங்கமேடு கிராமத்தை ஒட்டி நீர் செல்லும் கானாற்று ஓடையில் இருந்து புது மணல் சேகரிக்கப்பட்டு குவியல், குவியலாக குவித்து கடத்தி செல்லப்படுகிறது.

தண்ணீர்பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்ததிலிருந்து ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு மணல் திருட்டு நடந்து வருகிறது. நீர் ஓடை செல்லும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மணல் குவியலாக குவித்து வைக்கப்பட்டு வருகிறது. அங்கு வசிப்பவர்கள் அனைவரின் வீட்டிலும் ஓடைகளில் இருந்து அள்ளிசென்ற மணலை குவியலாக பதுக்கி வைத்துள்ளனர். ஆரம்பத்தில் சிறிய அளவில் தொடங்கிய மணல் கடத்தல் தற்போது டிராக்டர்கள், லாரிகள், மாட்டு வண்டிகள் என இரவில் ஜோராக மணல் கடத்தல் நடந்து வருகிறது. ஓடையை சுரண்டி மணல் திருடப்பட்டு வருவதால் நீர் செல்லும் கால்வாய்கள் உடைந்து சேதமடைந்து, நீர் ஏரிகளுக்கு செல்லாமல் வெளியேறி வருகிறது.

ஓடை நீர் செல்லும் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு 2 டன்னிற்கு மேலாக மணல் குவித்து வைக்கபட்டு இரவில் கடத்தி செல்லப்படுவதாக அருகில் இருக்கும் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அரியூர் போலீசாரிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதுகுறித்து வருவாய் துறையினருக்கு புகார் தெரிவித்துள்ளனர். புகாரின் பேரில் கடந்த சில தினங்களுக்கு முன் அங்கு சென்று ஆய்வு செய்த விஏஓ (பொறுப்பு) கவுதம்பாபு மற்றும் வருவாய் துறையினர், அங்கு ஓடையில் பட்டப்பகலில் மணல் திருட்டில் ஈடுபட்டவர்களை எச்சரித்துள்ளனர்.

அதிகாரிகள் சென்ற உடன் மீண்டும் தொடர்ந்து மணல் திருட்டு நடந்து வருகிறது. இந்த மணல் திருட்டை உடனடியாக தடுக்க வேண்டும் என அப்பகுதியினர் தாசில்தார் சரவணமுத்துவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவரும் பொது பணித்துறையினர் மூலம் குவித்து வைக்கபட்டுள்ள மணல் பறிமுதல் செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே ஊசூர் அருகே அத்தியூர் கலங்கமேடு பகுதியில் ஓடை நீர் செல்லும் கால்வாயில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஜருராக நடக்கும் மணல் திருட்டை தடுக்க இனியாது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories:

More
>