×

சிப்காட் தொழில் பூங்காக்களில் 16 புதிய குழந்தைகள் காப்பகங்கள் ரூ.190 கோடி செலவில் மெகா உணவு பூங்கா: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

 

சென்னை: சிப்காட் தொழில் பூங்காக்களில் 16 புதிய குழந்தைகள் காப்பகங்கள், ரூ.120 கோடி செலவில் திண்டிவனம் மெகா உணவு பூங்கா, ரூ.70 கோடி செலவில் தேனி மெகா உணவு பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சிப்காட் தொழில் பூங்காக்களில் பணிபுரிவோரின் குழந்தைகள் பராமரிப்புக்காக 16 புதிய குழந்தைகள் காப்பகங்கள்முதலீடுகளை ஈர்ப்பது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மட்டுமின்றி தொழிலாளர் நலன் பேணுவதிலும் தமிழ்நாடு அரசு தனிக் கவனம் செலுத்தி வருகிறது.

நாடு முழுவதிலும் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் மொத்த பெண்களில் 43 சதவிகித பங்களிப்பை கொண்டிருப்பது தமிழ்நாட்டின் தனிச் சிறப்பும் பெருமையும் ஆகும். எனவே, பெண் தொழிலாளர்களின் நலன் பேணும் வகையில் தேர்வாய்கண்டிகை, வல்லம் வடகால், சிறுசேரி, கும்மிடிப்பூண்டி, கடலூர், பர்கூர், பெருந்துரை, தூத்துக்குடி, நிலக்கோட்டை, ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, மானாமதுரை, ஒரகடம், பிள்ளைப்பாக்கம், ஓசூர், கங்கைகொண்டான் ஆகிய 16 தொழில் பூங்காக்களில் நிறுவப்பட்டுள்ள குழந்தைகள் காப்பகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்த குழந்தைகள் காப்பகங்களை தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம், இந்திய வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு மற்றும் தொழில் துறை மகளிர் அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கி உள்ளது. தொழில் பூங்காக்களில் பணிபுரியும் பெற்றோர்கள், குறிப்பாக தாய்மார்களின் குழந்தை பராமரிப்பு சுமையை குறைக்க ஏதுவாக பணிபுரியும் இடத்திற்கு அருகில், பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழலமைப்புடன் காப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், ரூ.120 கோடி செலவில் விழுப்புரம் மாவட்டத்தில் 157.91 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள திண்டிவனம் மெகா உணவு பூங்கா மற்றும் ரூ.70 கோடி செலவில் தேனி மாவட்டத்தில் 123.49 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள தேனி மெகா உணவு பூங்கா ஆகியவற்றை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமை செயலாளர் முருகானந்தம், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை செயலாளர் அருண் ராய், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மசெந்தில்ராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags : SIPCOT industrial parks ,food park ,Chief Minister ,MK Stalin ,Chennai ,SIPCOT ,Tindivanam mega food park ,Theni ,mega food park ,SIPCOT industrial parks… ,
× RELATED 25 டன் முந்திரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து