×

நாகர்கோவிலில் பெண் புரோக்கர் உதவியுடன் விபசாரம் லாட்ஜ் உரிமையாளர், 2 மேலாளர்கள் தப்பி ஓட்டம் தலைமறைவானவர்களை தேடுகிறது போலீஸ்

நாகர்கோவில், டிச.28 : நாகர்கோவிலில் பிரபல லாட்ஜில் விபசாரம் நடந்தது தொடர்பாக அதன் உரிமையாளர் மற்றும் 2 மேலாளர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள். நாகர்கோவில் டதி பள்ளி சந்திப்பு அருகே உள்ள பிரபல லாட்ஜ் ஒன்றில் விபசாரம் நடப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் வந்தது. இதன் பேரில் போலீசார் சோதனை நடத்த எஸ்.பி. உத்தரவிட்டார். அதன் பேரில் நேற்று முன் தினம் கோட்டார் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெயின் மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர். லாட்ஜில் இருந்த பணியாளர்களிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதையடுத்து லாட்ஜ் அறைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள இரு அறைகளில் இளம்பெண்களுடன் வாலிபர்கள், அரைகுறை ஆடைகளுடன் கிடந்தனர். விசாரணையில் அவர்கள் விபசாரத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அந்த இரு வாலிபர்களையும், இளம்பெண்களையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

இதில் அந்த இரு இளம்பெண்களும் மதுரையை சேர்ந்தவர்கள் என்பதும், பிடிபட்ட வாலிபர்கள் குலசேகரம் அருகே உள்ள தேவிக்கோடு பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (45), ஈத்தாமொழி பகுதியை சேர்ந்த ஆகாஷ் (23) என்பதும் தெரிய வந்தது. இவர்களிடம் நடத்திய விசாரணையில், லாட்ஜ் உரிமையாளரான நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியை சேர்ந்த துரைசாமி அனுமதியுடன், லாட்ஜ் மேலாளர்கள் கோட்டார் பீச் ரோடு பகுதியை சேர்ந்த முருகன், வெள்ளமடத்தை சேர்ந்த மூர்த்தி ஆகியோர் சேர்ந்து பெண் புரோக்கர் ஒருவரின் உதவியுடன் வாலிபர்கள், இளம்பெண்களை வைத்து விபசாரம் செய்தது தெரிய வந்தது.  இதையடுத்து பிடிபட்ட வாலிபர்களை கைது செய்த போலீசார், இது தொடர்பாக லாட்ஜ் உரிமையாளர் துரைசாமி மற்றும் மேலாளர்கள் முருகன், மூர்த்தி ஆகியோர் மீதும் வழக்குபதிவு செய்துள்ளனர். இவர்கள் தற்போது தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடி வருவதாக போலீசார் கூறினர். மீட்கப்பட்ட இரு இளம்பெண்களும் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பந்தப்பட்ட லாட்ஜ், நாகர்கோவில் நகரின் மைய பகுதியில் உள்ளது. அங்கு புரோக்கர்கள் மூலம் வெளி மாவட்ட இளம்பெண்களை வைத்து விபசாரம் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : persons ,Nagercoil ,
× RELATED ஆடு திருடமுயன்ற இரண்டு பேர் கைது