துறையூர், டிச.28: துறையூர் பகுதியில் முதல்வர் பிரசார இடத்தை பார்வையிட்டுவிட்டு செல்லும்போது அதிமுக கட்சி நிர்வாகிகள் கார்கள் ஒன்ேறாடு ஒன்று மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
துறையூர் பகுதிக்கு தேர்தல் பிரசாரத்திற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 30ம் தேதி வருவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் பிரசாரம் செய்யும் இடங்களை பார்வையிடுவதற்காக திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பரஞ்சோதி முசிறி வழியாக கண்ணனூர் வந்தார். கண்ணனூரில் முதல்வர் பிரசாரம் செய்யும் இடத்தை பார்வையிட்டுவிட்டு துறையூர் நோக்கி வரும்போது கொத்தம்பட்டி காலனி அருகே அவர் பின்னால் வந்த கார்கள் ஒன்றை ஒன்று முந்தி செல்லும்போது எதிர்பாராத விதமாக ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் கட்சி நிர்வாகிகள் மனோகரன், பாலசுப்ரமணியன், கார் டிரைவர் கோபி ஆகியோர் படுகாயமடைந்தனர்.