புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுகவை நிராகரிக்கிறோம் திமுக கிராமசபை கூட்டம்

அறந்தாங்கி, டிச.28: மணமேல்குடி ஒன்றியத்தில் அதிமுக அரசால் முடக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் திமுக ஆட்சி அமைந்தபின்பு செயல்படுத்தப்படும் என திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் பரணிகார்த்திகேயன் கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் மணமேல்குடியில் நேற்று அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற பெயரில் மக்கள் சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற் மணமேல்குடி ஒன்றிய திமுக செயலாளர் சக்திராமசாமி தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் கலைமணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் திமுக தேர்தல் பணிக்குழு செயலாளரும், மணமேல்குடி ஒன்றியக்குழுத் தலைவருமான பரணிகார்த்திகேயன் கலந்துகொண்டு பேசியதாவது:

மணமேல்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை, கோடியக்கரை சுற்றுலாத்தல மேம்பாட்டு பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை அதிமுக அரசு காழ்புணர்ச்சி காரணமாக முடக்கிவைத்துள்ளது. மேலும் மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு தேவையான மருத்துவர், செவிலியர் பணியிடங்களை நிரப்பாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாமல் நோயாளிகள் சிரமப்படும் நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமைய ஆதரவளிக்க வேண்டும்.

திமுக ஆட்சி அமைந்தவுடன், மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் அதிமுக அரசால் முடக்கப்பட்ட அரசு போக்குவரத்துக் கழக பணிமணை, கோடியக்கரை சுற்றுலா மேம்பாட்டு பணிகள் உள்ளிட்ட முடக்கப்பட்ட பணிகள் அனைத்தும் செயல்படுத்தப்படும் என்று கூறினார்.

கூட்டத்தில், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் தினையாகுடி சிவசுப்பிரமணியன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் முத்துசாமி, ஒன்றியக் கவுன்சிலர்கள் பெரியகருப்பன், வெண்ணிலா சேதுராமலிங்கம், மாவட்ட மீணவரணி அமைப்பாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆவுடையார்கோவில் அருகே மீமிசலில் திமுக சார்பில் மக்கள் சபை கூட்டம் அறந்தாங்கி முன்னாள் எம்.எல்.ஏவும், ஒன்றிய திமுக செயலாளருமான உதயம்சண்முகம் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட அவைத்தலைவர் பொன்துரை முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் துரைமாணிக்கம், முன்னாள் மாநில சட்ட திருத்தக்குழு உறுப்பினர் ராமநாதன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சுந்தரபாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் அபுதாஹிர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் உதயம்சிவசங்கர், பாரதிராஜா, மாவட்ட கவுன்சிலர் ராமநாதன், ஒன்றியக் கவுன்சிலர்கள் செந்தில்குமரன், அய்யாரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மக்கள் விரோத அதிமுக அரசை நிராகரிக்கிறோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருமயம்: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதிக்குட்பட்ட அரிமளம், திருமயம், பொன்னமராவதி ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளில் திமுக தெற்கு மாவட்ட தலைவர் எம்எல்ஏ ரகுபதி அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் கிராம சபை கூட்டம் நடத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக நேற்று திருமயம் அருகே உள்ள துளையானூர் ஊராட்சி யில் எம்எல்ஏ ரகுபதி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கலந்துகொண்டு குறைகளை தெரிவித்தனர். அப்போது எம்எல்ஏ ரகுபதி அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் திமுக மக்கள் ஆதரவோடு மாபெரும் வெற்றி பெற்று மக்கள் விரோத சட்டங்கள் களையப்பட்டு மக்களின் குறைகள் உடனடியாக தீர்க்கப்படும் என உறுதியளித்தார்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று திண்ணைப் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அப்பகுதி மக்கள் வைத்த சோலையாத்தா கோயில் நடைபாதை அமைக்கும் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட எம்எல்ஏ ரகுபதி உடனடியாக தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சத்தை ஒதுக்கீடு செய்தார். இதில் திருமயம் ஒன்றிய பொறுப்பாளர் சிதம்பரம், மாவட்ட பொருளாளர் சர்புதீன், பொதுக்குழு உறுப்பினர் புலிவலம் சுப்ரமணியன், இளைஞரணி கைலாசம், முன்னாள் சேர்மன் துரைராஜா, வர்த்தக அணி மங்கள ராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் அரிமளம் ஒன்றியம் செங்கீரை ஊராட்சியில் ஒன்றிய செயலாளர் பொன் ராமலிங்கம் தலைமையில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் கூட்டம் நடைபெற்றது. அப்போது செங்கீரை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரேஷன் கடை க்கு ரூ. 11 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்ட எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்து பணிகளை தொடங்கி வைத்த எம்எல்ஏ ரகுபதிக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

கறம்பக்குடி: கறம்பக்குடி அருகே குழந்திரான்பட்டு கிராமத்தில் அதிமுகவை நிராகரிப்போம் மக்கள் சபை கூட்டம் நடைபெற்றது. குழந்திரான்பட்டு திமுக ஒன்றிய கவுன்சிலரும், ஒன்றிய தலைவருமான மாலா ராஜேந்திரதுரை தலைமை வகித்தார். வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். திமுக வடக்கு மாவட்ட துணை செயலாளர் மதியழகன் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் பெண்கள் மக்கள் சபை கூட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர் இதில் குழந்திரான் பட்டு கிராமத்தில் உள்ள அணைத்து சமூகத்தினருக்கும் மயான கொட்டகை அமைத்து தர வேண்டும், பட்டுக்கோட்டையில் இருந்து ராங்கியன் விடுதி, குலத்திரான்பட்டு, கறம்பக்குடி, புதுக்கோட்டை வரை அனைத்து தரப்பு பொது மக்கள் பயணிகள் பயன்பெறும் வகையில் மீண்டும் புதுக்கோட்டை யில் இருந்து அதே வழி தடத்தில் பட்டுக்கோட்டை வரை போக்குவரத்து இயக்க வேண்டும் உள்பட அனைத்து கோரிக்கைகளையும் திமுக ஆட்சி வந்தவுடன் நிறைவேற்றி தர வேண்டும் என்று கூறி மனுக்களை மாவட்ட துணை செயலாளர் மதியழகனிடம் அளித்தனர். இவை அனைத்தும் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

திமுகவை சேர்ந்த கலியபெருமாள், காமராஜ் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நடராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பெண்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>