×

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்; 204வது ரேங்க் வீரர் வாலன்டின் சாம்பியன்

 

ஷாங்காய்: ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் இறுதிப் போட்டியில் மோனாகோ வீரர் வாலன்டின் வஷரோட் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். சீனாவின் ஷாங்காய் நகரில் ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டிகள் நடந்து வந்தன. நேற்று முன்தினம் நடந்த அரை இறுதிப் போட்டியில் செர்பியாவை சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச்சை (38 வயது, 4வது ரேங்க்), மோனாகோவை சேர்ந்த, 204வது ரேங்க் வீரர் வாலன்டின் வஷரோட் (26) வீழ்த்தி டென்னிஸ் உலகை அதிரச் செய்தார். மற்றொரு அரை இறுதியில் ரஷ்யாவின் டேனியில் மெத்வதேவை, பிரான்சின் ஆர்தர் ரின்டர்நெக் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இந்நிலையில், வாலன்டின் – ஆர்தர் இடையிலான இறுதிப் போட்டி நேற்று நடந்தது. முதல் செட்டை 6-4 என்ற புள்ளிக் கணக்கில் ஆர்தர் கைப்பற்றினார். அதன் பின் சுதாரித்து ஆக்ரோஷமாக ஆடிய வாலன்டின் அடுத்த இரு செட்களையும், 6-3, 6-3 என்ற செட் புள்ளிக் கணக்கில் அபாரமாக வசப்படுத்தினார். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் வென்ற வாலன்டின் வஷரோட், ஷாங்காய் மாஸ்டர்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தார். அவருக்கு, ரூ.10 கோடி பரிசும், 1000 புள்ளிகளும் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த ஆர்தருக்கு ரூ. 5.3 கோடி பரிசு வழங்கப்பட்டது.

 

Tags : Shanghai Masters Tennis ,Valentin ,Shanghai ,Monaco ,Valentin Vacherot ,Shanghai Masters ,Shanghai, China.… ,
× RELATED கொல்கத்தாவில் நாளை மறுநாள் முதல்...