×

கீரனூர் அருகே மர்மநபர்கள் துணிகரம் நெற்பயிரை தாக்கும் குலைநோய் கட்டுப்படுத்துவது எப்படி?

புதுக்கோட்டை, டிச.28: நெற்பயிரில் குலைநோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து, புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சிவகுமார் ஆலோசனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாற்றங்காலில் தொடங்கி அனைத்து வளர்ச்சிப் பருவங்களிலும் குலைநோய் நெற்பயிரைத் தாக்குகிறது. இலைகளின்மேல் பழுப்பு நிறத்தில் சாம்பல் நிற மையப் பகுதியுடனும் காய்ந்த ஓரங்களுடன்கூடிய கண்வடிவப் புள்ளிகள் காணப்படும். பல புள்ளிகள் ஒன்றுசேர்ந்து பெரிய ஒழுங்கற்ற திட்டுக்களை உருவாக்கும்.

இந்நோய் தீவிரமாகத் தாக்கும்போது பயிர் முழுவதும் எரிந்தது போன்று தோற்றமளிப்பதால் குலைநோய் எனப்படுகிறது. நெற்பயிரின் கழுத்துப் பகுதியில் இந்நோய் தாக்கும்போது கறுப்பு நிறமாக மாறிக் கதிர்மணிகள் சுருங்கியும், கதிர்கள் உடைந்தும் தொங்கும். இந்நிலையில் இது ‘கழுத்துக் குலைநோய்” எனப்படும். இந்நோய் நெற்பயிரின் கணுக்களில் தாக்கும்போது அவை கறுப்பு நிறமாக மாறி உடைந்துவிடும் நிலையானது ‘கணுக் குலைநோய்” எனப்படும்.
மேலாண்மை முறைகள்:

குலைநோயைக் கட்டுப்படுத்திட விவசாயிகள் ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளைக் கடைப்பிடித்தல் வேண்டும். நோயற்ற பயிரிலிருந்து விதைகளைத் தேர்வு செய்ய வேண்டும். நடவு வயலில் நோயற்ற நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். வயலிலும் வரப்பிலும் உள்ள களைகளை அகற்றிட வேண்டும். இந்நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்திட டிரைசைக்ளோசோல் 75 டபிள்யு.பி. என்ற மருந்து 120 கிராம் அல்லது அசோஸ்க்சிட்ரோபின் 23 எஸ்.சி. என்ற மருந்து 200 மி.லி. இதில் ஏதேனும் ஒன்றை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

நெற்பழநோய்:
நெற்பயிரினைத் தாக்கும் பழநோய் நெற்கதிர் மற்றும் மணிகளைத் தாக்கிச் சேதம் விளைவிக்கிறது. பாதிப்படைந்த நெல்மணிகள் மஞ்சள் நிறத்துடன் பழுத்துக் காணப்படும். முதிர்ச்சியடையாத மணிகள் உடைந்து காணப்படும். நெல்மணிகள் பதராகி அவற்றின் தரம் முற்றிலும் பாதிக்கப்படும். பழநோயினால் பாதிப்படைந்த வயல்களில் அறுவடைக்குப் பின் வைக்கோல் மற்றும் தாள்களை அழித்துவிட வேண்டும். இதனைக் கட்டுப்படுத்திட கதிர்பிடிக்கும் தருணம் அல்லது பூக்கும் பருவத்தில் ஒரு ஏக்கருக்கு காப்பர் ஹைட்ராக்சைடு 77 டபிள்யு.பி. என்ற மருந்து 400 கிராம் அல்லது ஹெக்சாகனசோல் 5 இ.சி. என்ற மருந்து 400 மி.லி. இதில் ஏதேனும் ஒன்றை 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு நெற்பயிரில் தோன்றும் குலைநோய் மற்றும் பழநோயினைக் கட்டுப்படுத்திடுமாறும், மேலும் கூடுதல் விவரங்களுக்குத் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுக வேண்டும்.

Tags : Keeranur ,
× RELATED நடந்து சென்ற முதியவர் மயங்கி விழுந்து சாவு