மயிலாடுதுறை அருகே கல்லூரிக்கு சென்ற மாணவி கடத்தலா? போலீசில் புகார்

மயிலாடுதுறை, டிச.28: மயிலாடுதுறை அருகே கல்லூரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாததால் அவரை வாலிபர், அவரது தாய் ஆகியோர் கடத்திச் சென்று விட்டதாக மாணவியின் தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

மயிலாடுதுறை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த விவசாயியின் மகள் மயிலாடுதுறை அரசு மகளிர் கல்லூரியில் அறிவியல் பிரிவில் முதலாமாண்டு படித்துவருகிறார். கொரோனா விடுமுறை என்பதால் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன்மூலம் நடத்தப்பட்ட வகுப்பில் கலந்துகொண்டுள்ளார். தேர்வும் ஆன்லைன்மூலம் நடைபெற்றுள்ளது. தேர்வு முடிந்ததும் அதற்கான விடைத்தாள்களை கல்லூரியில் வழங்கவேண்டும்.

இதற்காக கடந்த 22ம் தேதி காலை வீட்டிலிருந்து புறப்பட்டு கல்லூரிக்குச் சென்றவர் அன்று மாலைவரை வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவரது நண்பர்கள் வீட்டில் தேடியும் கிடைக்கவில்லை. விசாரித்தபோது சிறுமியின் வீட்டிற்கு கிடாத்தலைமேடு பகுதியை சேர்ந்த திருமுருகன் என்பவர் அடிக்கடி வந்துசென்றுள்ளார். அவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்தது. உடனடியாக கிடாத்தலைமேடு சென்று பார்த்தபோது அங்கே திருமுருகனும் இல்லை. அவரது தாய் பரமேஸ்வரியும் இல்லை. வீடு பூட்டப்பட்டு உள்ளது. தன் மகளுக்கு ஆசைவார்த்தைக்கூறி திருமுருகனும், அவரது தாய் பரமேஸ்வரியும் தனது மகளை கடத்திச் சென்று விட்டதாக அவரது தந்தை மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் உதவி ஆய்வாளர் வழக்குப் பதிவு செய்தார். காவல் ஆய்வாளர் கோப்பெருந்தேவி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Related Stories:

>