ஊட்டியில் உறை பனிப்பொழிவு: பூங்காக்களில் அலங்கார செடிகளை கருகாமல் பாதுகாக்கும் பணி தீவிரம்

ஊட்டி,டிச.28: ஊட்டியில் உறை பனிப்பொழிவு அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில் பூங்காக்களில் உள்ள அலங்கார செடிகளை கருகாமல் பாதுகாக்க கோத்தகிரி தாகை செடிகள் மூலம் மூடப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் மாதம் துவங்க வேண்டிய உறை பனி பொழிவு நிவர் மற்றும் புரெவி ஆகிய புயல்களின் தாக்கம் காரணமாக தாமதமானது. தொடர்ந்து இம்மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து பனிப்பொழிவு துவங்கியது.

ஆரம்பத்தில் பனியின் தாக்கம் சற்று குறைவாக இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக உறை பனிபொழிவின் தாக்கம் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்கா புல் மைதானம், குதிரை பந்தய மைதானம், சூட்டிங்மட்டம் உள்ளிட்ட பகுதிகளில் புல்வெளிகளில் உறை பனி படிந்து வருகிறது. உறை பனியால் வனப்பகுதிகளில் உள்ள புல்வெளிகள், செடி கொடிகள் கருகி பசுமை இழக்க துவங்கியுள்ளன. இந்த நிலையில் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, மரவியல் பூங்கா, தேயிலை பூங்கா உள்ளிட்ட பூங்காக்களில் உள்ள அலங்கார செடிகள், புல்வெளிகள் கருகாமல் இருக்கவும் அவற்றை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புல்வெளிகளுக்கு காலை, மாலை நேரங்களில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. மேலும் அலங்கார செடிகளை கோத்தகிரி தாகை செடிகள் மூலம் மூடி உறைபனியின் தாக்கம் இல்லாதவாறு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

Related Stories:

>