×

அறையட்டி பகுதிகளில் காட்டு மாடுகள் நடமாட்டம்

ஊட்டி,  டிச. 28: நீலகிரி மாவட்டத்தில் 55 சதவீதத்திற்கும் மேல் வனப்பகுதி நிறைந்த பகுதியாக உள்ளது.  வனங்களில் புலி, சிறுத்தை, யானை, காட்டு மாடு, மான், கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ளன. பெரும்பாலான கிராம பகுதிகள் வனத்தை ஒட்டியே அமைந்துள்ளதால் கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து விடுவது வழக்கம். நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் காட்டு மாடுகளின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது.

இவை கூட்டம் கூட்டமாக தேயிலை தோட்டங்களில் மேய்ச்சலில் ஈடுபடுவது, சாலையை கடந்து செல்வதை அடிக்கடி காண முடியும். இதனிடையே ஊட்டி கைகாட்டி அருகே அறையட்டி, ஆருகுச்சி, நெய்யட்டி உள்ளிட்ட கிராம பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.  இக்கிராமங்கள் வனத்தையொட்டி அமைந்துள்ளன. இக்கிராமங்களை ஒட்டியுள்ள தேயிலை தோட்டங்களில் சமீபகாலமாக காட்டு மாடுகள் கூட்டம் கூட்டமாக உலா வருகின்றன.

இதனால் கைகாட்டியில் இருந்து சாலை வழியாக நடந்து செல்பவர்கள் காட்டு மாடு கூட்டங்களை கண்டு அச்சமடைந்து வருகின்றனர். வனத்துறையினர் கண்காணித்து குடியிருப்பு பகுதியில் புகும் காட்டு மாடுகளை வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : closet areas ,
× RELATED குன்னூரில் குதிரை சாகசத்தில் ராணுவ வீரர்கள் அசத்தல்