×

ஊசிமலை காட்சி முனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை

கூடலூர்,டிச.28:   ஊசிமலை காட்சி முனையில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர்-ஊட்டி சாலையில் கூடலூர் நடுவட்டம் இடையே 26வது மைலில் ஊசிமலை காட்சி முனை உள்ளது. ஊசிமலை காட்சி முனை வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த காட்சி முனைக்கு செல்ல நுழைவு கட்டணம் ரூ.10ல் இருந்து ரூ.20ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சீசன் காலங்களில் தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இக்காட்சி முனைக்கு வந்து செல்வது வாடிக்கை. காட்சி முனை பகுதியில் இருந்து கூடலூர் நகர பள்ளத்தாக்கு மற்றும் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி, தவளை மலை காட்சி முனை உள்ளிட்ட பல்வேறு இடங்களை காண முடியும். சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் இப்பகுதிக்கு ஏராளமானோர் வருகை புரிகின்றனர். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுக்கு பிறகு, நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தற்போது நுழைவு கட்டணம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், காட்சி முனை பகுதியில் போதிய அடிப்படை வசதிகள் மேம்படுத்தாமல் உள்ளன. ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில், இரண்டு கழிப்பறைகள் மட்டுமே அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் மழைக்காலங்களில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக நிற்பதற்கு நிழற்குடைகள் எதுவும் அமைக்கப்படவில்லை.

சூழல் சார்ந்த சுற்றுலா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த காட்சி முனை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் தேவை கருதி மழைக்காலத்தில் பாதுகாப்பாக நிற்பதற்காக நிழற்குடை மற்றும் போதிய கழிப்பறை வசதி அமைக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, முகக்கவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

Tags : facilities ,
× RELATED வாக்குச்சாவடிகள் அடிப்படை வசதிகள்...