×

பயன்பெற அழைப்பு குளித்தலை, ேதாகைமலை ஒன்றியங்களில் ரூ.52.75 கோடியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும்

கரூர், டிச. 28: கரூர் மாவட்டம் குளித்தலை மற்றும் தோகைமலை ஒன்றியங்களை சேர்ந்த 253 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ரூ. 52.75 கோடி மதிப்பில் பணிகள் முடிக்கப்பட்டு, குடிநீர் வழங்குவதற்காக நடைபெற்று வரும் சோதனை இயக்க பணிகள், குழாய்கள் பதிப்பது மற்றும் நீர் சேகரிப்பு தொட்டி கட்டும் பணிகளை கலெக்டர் மலர்விழி, வீரவல்லி, கே.பேட்டை, வதியம், கள்ளை, நெய்தலூர் ஆகிய பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஆய்வு குறித்து கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளதாவது:

குளித்தலை ஒன்றியத்தில் உள்ள 42 குக்கிராமங்களை சேர்ந்த 2,144 குடியிருப்புகளுக்கும், தோகைமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 211 கிராமங்களை சேர்ந்த 11ஆயிரம் குடியிருப்புகளுக்கும் என மொத்தம் 253 கிராமங்களை சார்ந்த 13,144 குடியிருப்புகளுக்கு நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 55 லிட்டர் வீதம் வழங்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு குளித்தலை வதிய்ம் ஊராட்சிக்கு அருகில் உள்ள காவிரி ஆற்றில் 6 மீட்டர் விட்டமுள்ள நீர்சேகரிப்பு கிணறு அமைக்கப்பட்டு, அங்கிருந்து 60 குதிரைத்திறன் கொண்ட இரண்டு மின் மோட்டார்கள் மூலம் 12,800 மீட்டர் நீளமள்ள 300மீ விட்டமுள்ள தேனிரும்பு குழாய்கள் மூலம் ரத்தினம்பிள்ளை புதூர் காலனி அருகில் அமைக்கப்பட்டுள்ள 16.05 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டிக்கு அனுப்பப்படுகிறது. இந்த மோட்டார்கள் ஒவ்வொன்றும் ஒரு நிமிடத்திற்கு 1880 லிட்டர் தண்ணீரை 65மீட்டர் உயரத்துக்கு உந்தும் சக்தி கொண்டது.

இந்த தொட்டியில் இருந்து குளித்தலை மற்றும் தோகைமலை ஊராட்சிகளில் பல்வேறு இடங்களில் அமையவுள்ள 29 தரைமட்ட தொட்டிகளுக்கு பிவிசி ம ற்றும் தேனிரும்பு குழாய்கள் மூலமாக நீர் ஏற்றப்படுகிறது. இந்த தரைமட்ட தொட்டியில் இருந்து பிவிசி குழாய்கள் மூலமாக ஏற்கனவே கட்டப்பட்டுள்ள மேல்நிலை தொட்டிகளுக்கு குடிநீர் ஏற்றப்பட்டு, ஏற்கனவே, பதிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள குடிநீர் விநியோக குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படவுள்ளன. பணிகள் முழுமையாக முடிவுற்றுள்ள நிலையில் தற்போது குழாய்கள் வழியாக குடிநீர் அனுப்பப்பட்டு சோதனை இயக்க பணிகளும், தரைமட்ட தொட்டிகள் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

மேலும், குழாய்கள் பதிப்பதற்கு சிரமமாக உள்ள இடங்கள் மற்றும் சாலைகளின் குறுக்கே குழாய்கள் பதிக்கப்பட வேண்டிய இடங்கள் கண்டறியப்பட்டு அதில் உள்ள சிரமங்களை போக்குவதற்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை அலுவலர்களை கொண்டு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் ஒருங்கிணைத்து செயல்பட்டு பணிகளை விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு இந்த திட்டம் கொண்டு வரப்படவுள்ளது என்றார். நிகழ்ச்சியில் குளித்தலை சப்.கலெக்டர் ஷேக் அப்துல்ரகுமான், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் பிரபுராம் உட்பட அனைத்து அதிகாரிகளும் உடனிருந்தனர்.

Tags : Benefit Kulithalai ,
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு