கொடுங்கையூர் வெங்கடேஷ்வரா காலனியில் விரட்டி கடிக்கும் தெரு நாய்கள்: பொதுமக்கள் கடும் அவதி

தண்டையார்பேட்டை, டிச.27: சென்னை மாநகராட்சி 4வது மண்டலம், 34வது வார்டுக்கு உட்பட்ட கொடுங்கையூர் வெங்கடேஷ்வரா காலனியில் 10 தெருக்கள் உள்ளன. இங்கு, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சமீப காலமாக தெரு நாய்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இவை, இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்தி கடிக்கின்றன. மேலும், நாய்கள் விரட்டும்போது, வாகனத்தில் இருந்து தவறி விழுந்து பலர் காயமடைந்து வருகின்றனர்.

குறிப்பாக, பணி முடிந்து இரவில் சாலையில் நடந்து செல்பவர்களை தெரு நாய்கள் விரட்டி கடிப்பதால் அப்பகுதி மக்கள் இரவில் வெளியில் நடமாடவே அச்சப்படும் நிலை உள்ளது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இந்த  பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உள்ளன. இவை சாலையில் செல்பவர்களை விரட்டி கடிப்பதால் தினசரி வேலைக்கு செல்வோர் மிகுந்த அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே, இந்த நாய்களை மாநகராட்சி அதிகாரிகள் பிடித்து செல்லவேண்டும்  என பலமுறை தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம்,’’ என்றனர்.

Related Stories:

More
>