×

மகள்கள் கல்விக்கு வாங்கிய கடனை செலுத்த முடியாமல் தந்தை தற்கொலை உடலை அடக்கம் செய்ய ரூ.50 ஆயிரம் கேட்டதால் சோகத்தில் மூழ்கிய குடும்பம்: பல்லாவரத்தில் பரிதாபம்

பல்லாவரம், டிச.27: பல்லாவரம் சக்தி நகரை சேர்ந்தவர் ராஜன் (48), கார் டிரைவர். இவரது மனைவி ஏஞ்சல் மேரி (39). இவர்களுக்கு தமிழரசி (18), தமிழ்செல்வி (17) என்ற மகள்கள்  உள்ளனர். இவர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ்  படித்து வருகின்றனர்.
ராஜன் தனது மகள்களை மருத்துவம் படிக்க வைப்பதற்காக கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தனியார் வங்கி ஒன்றில் ரூ.7 லட்சம் கடன் வாங்கினார். அதற்கு மாதம்தோறும் முறையாக வட்டியும் செலுத்தி வந்தார். இந்நிலையில், கடந்த 9 மாதங்களுக்கு  முன்பு ராஜன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, விபத்தில் சிக்கி காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

மேலும், கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையிழந்து, வருமானமின்றி தவித்து வந்தார். இதனால், கடந்த 2 மாதங்களாக வங்கிக்கு வட்டி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இவர், தனது நிலையை எடுத்து கூறியும் தனியார் வங்கி ஊழியர்கள் வட்டி பணத்தை செலுத்தும்படி தொடர்ந்து ராஜனுக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர். இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினார்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ராஜனின் மனைவி, மகள்கள் அருகில் உள்ள தேவாலயத்திற்கு சென்றனர். ராஜன் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். தேவாலையத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பிய அவரது குடும்பத்தினர், நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால், சந்தேகமடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றபோது, ராஜன் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர்.

தகவலறிந்து பல்லாவரம் போலீசார் விரைந்து வந்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ராஜனின் உடலை பல்லாவரத்தில் அடக்க செய்ய இடம் கொடுப்பதற்கு ரூ.35 ஆயிரமும்,  இறுதி சடங்கு செய்ய ரூ.15 ஆயிரமும் என ரூ.50 ஆயிரம் கொடுத்தால்தான் அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும் என அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ அமைப்பினர் கூறியதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கடன் தொல்லையால் ராஜன் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது உடலை அடக்கம் செய்ய ரூ.50 ஆயிரம் கட்ட வேண்டும் என கூறியது குடும்பத்தினரை அதிர்ச்சி அடைய செய்தது. இதனையடுத்து, ராஜனின் உறவினர்கள் அந்த பணத்தை கட்டி உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். கடன் தொல்லையால் உயிரிழந்தவர்  சடலத்ைதை பணம் கட்டினால்தான் அடக்கம் செய்வோம் என்று கிறிஸ்தவ அமைப்பினர் கூறியது அப்பகுதி மக்களை வேதனையில் ஆழ்த்தியது.

Tags : daughters ,
× RELATED 22 வேட்பாளர்கள் ஆர்ஜேடி அறிவிப்பு: லாலுவின் 2 மகள்களுக்கும் சீட்