இருவேறு விபத்தில் 3 பேர் படுகாயம்

நாட்றம்பள்ளி,டிச.27: நாட்றம்பள்ளி அருகே நேற்று நடந்த இருவேறு விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாட்றம்பள்ளி அடுத்த திரியாளம் பகுதியை சேர்ந்தவர் ஏகாம்பரம்(47). இவரது நண்பர் சிலம்பரசன்(34). இவர்கள் இருவரும் மொபட்டில் புத்தகரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். பாரண்டப்பள்ளி கூட்டுரோடு பகுதியில் சாலையை கடக்க முயன்றுள்ளனர். அப்போது, திருவண்ணாமலையில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதில், படுகாயமடைந்த ஏகாம்பரம் மற்றும் சிலம்பரசனை அப்பகுதி மக்கள் மீட்டு, சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல், நாட்றம்பள்ளி அடுத்த ஆத்தூர்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற லாரி எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற வாகனம் மீது மோதியது.

இதில், லாரி டிரைவர் ராகேஷ்(25) படுகாயமடைந்தார். இதைப்பார்த்த அப்பகுதிமக்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்துகள் குறித்த நாட்றம்பள்ளி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>