ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல கால்வாய் வெட்டிய விவசாயிகள்: தண்டராம்பட்டு அருகே பரபரப்பு

தண்டராம்பட்டு, டிச.27: சாத்தனூர் அணையில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பிவிட விவசாயிகள் கால்வாயை அமைக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே சாத்தனூர் அணை கட்டப்பட்டு உள்ளது. இந்த அணை நீரின் மூலம் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடந்து வருகிறது. இந்த அணைக்கு அருகே சாத்தனூர், கொழுந்தம்பட்டு, வீராணம், தரடாப்பட்டு, கீழ்வணக்கம்பாடி, மேல்கரிப்பூர் ஆகிய ஊராட்சிகளில் ஏரிகள் அமைந்துள்ளது.

இந்த ஏரிகளை நம்பி பாசனம் செய்து வரும் விவசாயிகள், சாத்தனூர் அணையில் இருந்து ஏரிகளுக்கு கால்வாய் அமைத்து தண்ணீரை திறந்துவிட வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நேற்று மண்வெட்டி, கடப்பாரையுடன் சாத்தனூர் அணை நீர்த்தேக்கம் அருகே உள்ள மல்லிகாபுரம் பகுதியில் திரண்டனர். பின்னர், நீர்த்தேக்கத்தில் இருந்து அங்குள்ள சந்தவெட்டி ஓடை வழியாக ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும்வகையில், கால்வாய்களை வெட்ட ஆரம்பித்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த தாசில்தார் மலர்கொடி, கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள், உங்களது கோரிக்கை குறித்து மனு அளியுங்கள். இதுகுறித்து கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் எடுத்துக்கூறி ஏரிக்கால்வாய்களை அமைத்து சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திருப்பிவிட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையேற்று விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories:

>