விருத்தாசலம் அருகே ரேஷன் கடையில் பொருட்கள் வழங்க கோரி பொதுமக்கள் மறியல்

விருத்தாசலம், டிச. 27: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி பகுதிக்கு உட்பட்ட கொல்லத்தங்குறிச்சியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் இயங்கி வரும் நியாய விலை கடை அமைந்துள்ளது. இதில் அரிசி, மண்ணெண்ணெய், கோதுமை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த நியாய விலை கடையில் தினந்தோறும் 20க்கும் உட்பட்ட குடும்ப அட்டை தாரர்களுக்கு மட்டும் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வந்துள்ளன. இந்நிலையில், நேற்று நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் அனைத்து நியாய விலை கடை விற்பனையாளர்களும் கலந்து கொண்டனர். இந்த சமயத்தில் கொல்லத்தங்குறிச்சி நியாய விலை கடையில் ரேஷன் பொருட்கள் வாங்க பொதுமக்கள் திரண்டனர். அப்போது கடை விற்பனையாளர் அங்கு இல்லாததால், அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்து சென்ற கருவேப்பிலங்குறிச்சி போலீசார் அவர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக சமாதானப்படுத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories:

>