×

தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது: 10 பவுன் நகை, பைக் பறிமுதல்

விழுப்புரம், டிச. 27: விழுப்புரம் நகரில் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் நடப்பதாக புகார் மனுக்கள் விழுப்புரம் நகர காவல் நிலையம், தாலுகா காவல் நிலையம், மேற்கு காவல் நிலையத்தில் வந்த வண்ணம் உள்ளது. இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான சிறப்பு தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். நேற்று விழுப்புரம் காட்பாடி ரயில்வே கேட் அருகே சிறப்பு தனிப்படை எஸ்.ஐ பிரபு மற்றும் ஆனந்த் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்குரிய 2 வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் இருவரும் முன்னுக்கு பின்முரணாக பதிலளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் புதுப்பாளையம் அம்மன் கோயில் தெரு பகுதியை சேர்ந்த கருப்பசாமி மகன் ஆனந்தபாபு (18), நடுத்தெரு புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த கரும்பாயன் மகன் சூர்யா (20) என்பது தெரியவந்தது. மேலும் இருவரும் விழுப்புரம் நகர பகுதியில் தனியாக செல்லும் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபடுவது, ஆளில்லா வீடுகளில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இவர்களிடம் 10 பவுன் நகை, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.

Tags : robbery ,
× RELATED சென்னை தாம்பரம் அருகே படப்பை பஜாரில்...